கொடைக்கானல்
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மேலும் ஒரு மாதம் அதாவது செப் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தளர்வுகளுடன் இந்த ஊரடங்கு இன்று நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், தளர்வுகளின் முக்கிய அம்சமாக இ-பாஸ் ரத்து மற்றும் பொது போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தின் முக்கிய மலைப்பகுதி சுற்றுலா தலங்களான ஊட்டி (நீலகிரி), கொடைக்கானல் (திண்டுக்கல்), ஏற்காடு (சேலம்) போன்ற பகுதிகளுக்குச் செல்ல வேண்டும் என்றால் இ-பாஸ் கட்டாயம் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது," பிற மாவட்ட மக்கள் தேவையின்றி நீலகிரிக்கு வர வேண்டாம். நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் எதுவும் திறக்கப்படாது எனவும், உள்ளூர் மக்கள் இ-பாஸ் பெற ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டையை காட்டினால் மாவட்டத்திற்குள் பயணம் செய்யலாம். மேலும் அவர்களுக்கு மிக எளிதாக இ-பாஸ் வழங்க ஏற்பாடு செய்யப்படும். மாவட்டத்துக்குள் 50 சதவிகித அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன” எனக்கூறினார்.
இதே போல ஏற்காடு பகுதி அமைந்துள்ள சேலம் மற்றும் கொடைக்கானல் பகுதி அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் இ -பாஸ் கட்டாயம் எனவும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளனர்.