tamilnadu

img

எழில் கொஞ்சும் ஏற்காடு

சேலம் மாவட்டம் ஏற்காடு இயற்கை எழில் கொஞ்சும்பரந்து விரிந்த பள்ளத்தாக்குகள் கொண்ட சுற்றுலா தளம் ஆகும். கடல் மட்டத்திலிருந்து 5326 அடிஉயரத்தில், 1623 மீட்டர் அகலத்தில் இத்தளம் அமைந்துள்ளது. சேலத்தில் இருந்து 36 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் 20 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. அனைத்து கால நிலை மாற்றங்களிலும் குளிர்ந்த காற்றும் பசுமை நிறதோற்றம் கொண்ட கண்களை கவரும் அழகும், மனதிற்கு இனிமையான தென்றலும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.ஏழைகளின் ஊட்டி எனப்படும் இந்த சுற்றுலா தளத்திற்க்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக குவிந்து வருகின்றனர். இங்குள்ள ஏரியில் சுற்றுலா பயணிகள் படகுசவாரி செய்து மகிழ்கின்றனர். தொடர்ந்து அண்ணா பூங்கா, மான் பூங்கா, லேடிஸ் சிட் லேக்வியூ, சேர்வராயன் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சென்று பார்த்து ரசித்து தங்கள் குடும்பத்துடன் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்மேலும் இங்கே முக்கனியில் இரண்டாவது கனியாக விளங்கும் பலாப்பழத்தின் விளைச்சல் அமோகம். ஏற்காட்டில் விளையும் பலாப்பழத்திற்கு தனி சுவையும் மணமும்உள்ளது. ஆகவே இந்த பலாபலங்களை சுற்றுலா பயணிகள் சுவைத்து மகிழ்கின்றனர்.

மேலும் ஏற்காடு மலைப்பகுதியில் கிரீடமாக கருதப்படும் தாவரவியல் பூங்கா தற்போது புதிதாக புது பொலிவு பெற்று வருகிறது. எங்கு பார்த்தாலும் பசுமை நிறைந்த மலைகள், கண்களை கவரும் காப்பித் தோட்டம் மனதை மயக்கும் சில்லென்று குளிர்ந்த காற்று என சுற்றுலா பயணிகளை பரவசப்படுத்தும் வகையில் கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் அரசன் என்று அழைக்கப்படும் ஏற்காடு அமைந்துள்ளது.தோட்டக்கலைத் துறை சார்பில் கோடை விழாவிற்காக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலர்தொட்டிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. இங்கே பூத்துக் குலுங்கும் வண்ண வண்ண மலர்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்வது வாடிக்கையான ஒன்று. படகுசவாரிக்கென மோட்டார் படகு, துடுப்புபடகு, பெடல் படகு என சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மகிழும் சுற்றுலாவாசிகள் சில குறைகளும் தெரிவிக்கின்றனர். அதாவது, படகு சவாரியின் கட்டணம் மிக அதிகமாக வசூலிக்கப்படுவதாக சுற்றுலா பயணிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இங்குள்ள வனஉயிரிகளுக்கு தண்ணீர் உள்ளிட்டவைகளை வனத்துறை வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும். வாகன நிறுத்தங்களை சீர்படுத்த வேண்டும். அனைத்து இடங்களிலும் வாகன சுங்கக் கட்டணம் பல்வேறு நபர்களால் வசூலிக்கப்படுகிறது. இது சுற்றுலா பயணிகள் முகம் சுளிக்கும் வகையில் உள்ளது. மேலும் ஏற்காடு ஏரியை தூர்வாரி அழகு படுத்த வேண்டும் எனவும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.-(ந.நி)