திருவனந்தபுரம்:
கேரளத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான எதிர்கால நிகழ்ச்சி நிரலை திட்டமிடவும் ஒன்றுபட்ட போராட்டங்கள் நடத்தவும் முடிவெடுக்கவுமான பொறுப்பு முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் ஞாயிறன்று நடந்த அரசியல், மத, சமூக அமைப்புகளின் கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. எந்தெந்த பகுதிகளில் ஒன்றுபட்ட போராட்டங்கள் நடத்த முடிவும் என்பது குறித்து ஆலோசிக்கப்படும்.
இக்கூட்டத்தில் உரையாற்றுகையில், “சட்ட திருத்தத்துக்கு எதிராக அரசு நீதிமன்றத்தை அணுக வேண்டும்; சட்டமன்ற கூட்டத்தை நடத்தி விவாதிக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் பரிந்துரைகள் வந்தன. இந்த பிரச்சனை அரசின் பரிசீலனையில் உள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். “அரசமைப்பு சாசனமும் மதச்சார்பின்மையும் பாதுகாக்கப்பட ஒன்றுபட்டு பெரிய அளவில் களமிறங்க வேண்டிய காலம் இது. ஒன்றாக நின்று போராட்டம் நடத்தும்போது நாம் காண்பதற்கும் மேலான பலன் கிடைக்கும். நாடே அதனை முன்மாதிரியாகக் கொள்ளும் நிலை ஏற்படும். மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிரிக்கும் செயல்முறை, எந்த வடிவத்திலும், அதிகார நிலையிலிருந்து வந்தாலும் கேரளத்தில் அது விலைபோகாது. இந்த நிலையில், ஒற்றுமையின் செய்தி இந்தியாவுக்கு வழங்கப்பட வேண்டும். அரசமைப்பு சாசனத்தைவிட எந்த சட்டமும் உயர்ந்ததல்ல” என முதல்வர் சுட்டிக்காட்டினார்.
ஏராளமான போராட்டங்கள் பல்வேறு இடங்களில் நடைபெறுகின்றன. இவற்றில் தேறையற்றவர்களுக்கு இடமளிக்க கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார். “வகுப்புவாத - தீவிரவாத அமைப்புகள் நடத்தும் போராட்டங்கள் கட்டுபாட்டுக்குள் இருக்கும் எனக் கருத முடியாது. இவர்களுக்கு எதிராக உரிய நிலைபாடு மேற்கொள்ளப்படும்” எனவும் முதல்வர் கூறினார். அத்தகைய சக்திகளின் தலையீடு சமூகத்தின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவாது; நியாயமான போராட்டங்களில் அரசு தரப்பிலிருந்து தலையீடு இருக்காது என்றும் உறுதியளித்தார்.
“மதம் குடியுரிமையின் அடிப்படையாக மாற்றப்படும்போது அரசமைப்பு சாசனம் தூக்கி எறியப்படும். அப்போது மதச்சார்பற்ற நாடு என்பது மாறி மதச்சார்பு நாடு என்றாகிவிடும். மதம் குடியுரிமைக்கான அடிப்படைத் தகுதியாகிவிடக்கூடாது. அரசமைப்பு சாசனம் உயர்த்திப்பிடிக்கும் மதச்சார்பின்மைக்காக எல்லா காலத்திலும் நிலைகொண்ட மாநிலம் கேரளம். இப்போது ஏற்பட்டுள்ளது மதப்பிரச்சனை மட்டுமல்ல; இது நாட்டின் உயிர்வாழ்வை பாதிக்கும் ஒரு பிரச்சினையாகும். தாயின் வெவ்வேறு பிள்ளைகள் என்கிற நிலையில் நாம் வாழ்ந்து வருகிறோம். இங்கு ஒருவருக்கொருவர் உதவும் நிலையை மதங்கள் மேற்கொண்டு வருகின்றன. மதப் பிரச்சாரம் செய்வதற்கு எதிரான நிலையிலும்கூட நல்லவிதமாகவே அணுகும் நாடு இது. மக்கள் தொகை பதிவேட்டோடு சம்மந்தப்பட்ட நடவடிக்கைகளை கேரள அரசு நிறுத்தி வைத்துள்ளது. மாநிலத்தில் தடுப்புக்காவல் மையங்கள் இல்லை; அவை நிறுவப்படமாட்டாது” எனவும் முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.
ரமேஷ் சென்னித்தலா
இந்தியாவை நேசிக்கும் அனைத்து மக்களும் மத, சாதி, அரசியல் சிந்தனைகளைக் கடந்து ஒன்றுபட்டு நிற்க வேண்டிய நேரம் இது என, கூட்டத்தில் பேசிய கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா கூறினார். நாட்டின் மதச்சார்பின்மை ஆபத்தில் சிக்கியிருக்கும் நிலையில் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதை தீவிர தன்மையுடன் அணுக வேண்டும். அரசியல் சாசனத்தின் அடிப்படைக் குணத்தை தலைகீழாக மாற்றும் முயற்சி மத்திய அரசிடமிருந்து நடந்து வருகிறது. இதனை நீதிமன்றம் கேள்விக்குள்ளாக்கியுள்ளது என்றும் எதிர்கட்சித் தலைவர் கூறினார். முன்னதாக அமைச்சர் ஏ.கே.பாலன் வரவேற்றார். அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளான ஏ.கே.சசீந்திரன், ராமச்சந்திரன் கடனப்பள்ளி, பி.கே.குஞ்ஞாலிக்குட்டி எம்.பி, கொடிக்குந்நில் சுரேஷ் எம்.பி, என்.கே.பிரேமச்சந்திரன் எம்.பி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பேசினர்.