திருவனந்தபுரம், நவ. 5- பொதுப்பணித்துறையின் கணக்கு தணிக்கையாளர்கள் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்ட முறைகேடுகளின் அடிப்படையில் ஆறு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். குற்றச்சாட்டுக்கு உள்ளான 14 அதிகாரிகள் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த யுடிஎப் ஆட்சி காலத்தில் நடந்த முறைகேடுகள் கணக்கு தணிக்கையில் கண்டறியப்பட்டன. அதன்படி எர்ணாகுளம் பொதுப்பணித்துறையின் கட்டுமான பிரிவு மண்டல அலுவலக ஊழியர்களான நிர்வாக பொறியாளர் லதா மங்கேஷ், உதவி பொறியாளர் மானோஜ், இளநிலை கண்காணிப்பாளர் ஷெல்மி, காசாளர் தீபா, எழுத்தர்களான வி.விஜயகுமார், பிரசாத்.எஸ்.ஒய் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்று பல்வேறு குற்றச்சாட்டுக்கு உள்ளான 14 ஊழியர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், ஒப்பந்ததாரர் சுபின் ஜார்ஜின் ஒப்பந்ததாரர் உரிமத்தை ரத்து செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சனையில் ஊழல் தடுப்பு பிரிவின் விசாரணைக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அமைச்சர் ஜி.சுதாகரன் உத்தரவின்படி இந்த நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தகைய முறைகேடுகள் மாநிலத்தின் பல அலுவலகங்களில் நடைபெற்ற விவரங்கள் கிடைத்துள்ளதாகவும் அவற்றுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் ஜி.சுதாகரன் தெரிவித்தார். அரசுக்கு ஏற்பட்ட ரூ.1,77,62,492 இழப்பை சம்பந்தப் பட்டவர்களிடமிருந்து ஈடு செய்யவும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.