திருவனந்தபுரம், ஏப்.21- தேர்தல் பிரச்சாரத்தை உண்மையான ஜனநாயக திருவிழாவாக கொண்டாடினர் கேரள மக்கள். அங்குள்ள அரசியல் கட்சிகள் உச்சகட்டமாக நடத்திய பிரச்சார நிறைவுநிகழ்ச்சி ‘கொட்டி கலாசல்’ வழக்கம்போல் கண்கவர் நிகழ்வாக அமைந்தது.கேரள மாநிலத்தில் 20 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை (ஏப்.23)தேர்தல் நடைபெற உள்ளது. 227 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தவாக்காளர் எண்ணிக்கை 2,61,51,504. இதில் 1,34,66,521 என்கிற எண்ணிக்கையில் பெண் வாக்காளர்களே அதிகம். புதியவாக்காளர்கள் 2,88,191 உள்ளனர். முக்கிய கட்சிகள் மூன்று அணிகளாக அனைத்து தொகுதிகளிலும் மும்முனைப் போட்டியில் உள்ளன. ஆனாலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணிக்கும், காங்கிரஸ் கட்சிதலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் இடையே கடும் போட்டிஉள்ளது. கேரள அரசு மேற்கொண்டுவரும் இந்தியாவுக்கே முன்மாதிரியான திட்டங்கள் எல்டிஎப் அணிக்கு பெரும் முன் னேற்றத்தை கொடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் உட்பூசல்களும், தாமதமாக வேட்பாளர்களை அறிவித்தது. அதன் பிறகும்கூட வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட வருவதற்காக காத்திருந்தது. அதற்குள் எல்டிஎப் வேட்பாளர்கள் இரண்டு கட்ட பிரச்சாரத்தை நிறைவுசெய்திருந்தனர்.பாஜக தலைமையிலான என்டிஏ கேரள தேர்தல் களத்தில் பெரிய சக்தியாகஇல்லை என்றாலும், மத்திய ஆட்சி அதிகாரத்தையும், ஊடக வெளிச்சத்தையும் பயன்படுத்தி தனது இருப்பை காட்டிக் கொண்டது. கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த தேர்தல்பிரச்சாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் சீத்தாராம் யெச்சூரி,பிரகாஷ் காரத், பினராயி விஜயன், சுபாஷினி அலி, பிருந்தா காரத், எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை, கோடியேரி பாலகிருஷ்ணன், எம்.ஏ.பேபி உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரம் செய்தனர். காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, முல்லப்பள்ளி ராமச்சந்திரன், ரமேஷ் சென்னித்தலா, உம்மன்சாண்டி உள்ளிட்டோரும், என்டிஏவுக்கு பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்டோரும் பிரச்சாரம் மேற்கொண்டனர்.ஞாயிறன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது. அதையொட்டிஅனைத்து தொகுதிகளிலும் கொட்டிகலாசல் என்கிற பெயரில் இருசக்கர வாகன அணிவகுப்பும், அதன் நிறைவாக பெரும் வாத்திய முழக்கங்களோடு, தொண்டர்களின் உற்சாக கொண்டாட்டத்தோடும் அனைத்து அணியினரும் தனித்தனியாக திரண்டு பிரச்சாரத்தை நிறைவு செய்தனர். இதில் எல்டிஎப் நடத்திய கொட்டி கலாசல் அனைத்து தொகுதிகளிலும் உற்சாகத்தின் உச்சந்தொட்டு வெற்றியை பறைசாற்றின.