திருவனந்தபுரம்:
சுபிக்ஷ கேரளம் திட்டத்தின் பகுதியாக கேரளத்தில் தரிசுநில சாகுபடியை ஊக்குவிக்கபெருமளவிலான சலுகைகள் அளிக்கப்படுகின்றன. இதற்கான திட்டத்தை உள்ளாட்சித் துறை தயாரித்துள்ளது.
இத்திட்டத்தின்படி ஒரு எக்டேர் தரிசுநிலத்திற்கு ரூ.40,000 மானியமாக அளிக்கப் படுகிறது. இதில் ரூ.35,000 விவசாயிக்கும் ரூ.5,000 நில உடமையாளருக்கும் கிடைக்கும்.இது மட்டுமல்லாமல் மற்ற விவசாயத்துக் கான சலுகைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. புதிய ஆண்டுத் திட்டத்தில் தேவையான மாற்றங்களைச் செய்யவும் அனுமதி வழங்கப் படும். உள்ளாட்சித்துறை அமைச்சர் ஏ.சி.மொய்தீன் தலைமையில் நடந்த ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கோவிட் பரவுவதை எதிர்கொண்டு உணவுதன்னிறைவை உறுதி செய்வதற்காக சுபிக்ஷ கேரளம் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை உள்ளாட்சி, வேளாண்மை, மீன்வளம், பால்வள மேம்பாடு மற்றும் கால் நடை பராமரிப்புத் துறைகள் இணைந்து செயல்படுத்துகின்றன. இத்திட்டத்தின்படி நெல் சாகுபடிக்கான தற்போதைய மானியம் (ஒரு பயிருக்கு) ரூ .17,000. இத்தொகை ரூ .22,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. காய்கறி சாகுபடிக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.17,000 பந்தல் அமைப்பதற்கான உதவி உட்பட ரூ.25,000 ஆக உயர்த்தப்படும். குளிர்கால காய்கறிகளுக்கு 30,000. பருப்பு வகைகள், கிழங்குகள், சிறுதானியங்கள், நிலக்கடலை போன்றவற்றுக்கு ரூ.20,000. வாழைக்கு ரூ.30,000. எண்ணெய் வித்துக்கள் மற்றும் பிற பயிர்களுக்கு ரூ.10,000 மானியம் கிடைக்கும்.
உள்ளாட்சி அமைப்புகள் மூலம் விவசாயிகளுக்கான மானியம் வழங்கப்படும். இதற்காக வருடாந்திர திட்டங்களுக்கு கூடுதல்தொகை ஒதுக்கி அத்திட்டங்கள் மறுசீரமைக் கப்படுகின்றன. தற்போது, உள்ளாட்சி அமைப்புகள் சுமார் ரூ.900 கோடியை விவசாயத்துக்கு ஒதுக்கியுள்ளன. திட்டங்கள் மறுசீரமைக்கப்படும்போது இந்த ஆண்டு சாலைகள் மற்றும் கட்டிடங்கள் போன்ற அத்தியாவசியமற்ற சில திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டதொகை விவசாயத்திற்கு மாற்ற அனுமதிக் கப்பட்டுள்ளது. தற்போது, முதல்வரின் கிராமப்புற சாலை திட்டம் மற்றும் கேரள புனரமைப்பு திட்டம் ஆகியவற்றிலிருந்து சுமார் ரூ.1500 கோடி பெறப்பட்டுள்ளது. எனவே, சாலை புனரமைப்புக்கான பணத்தை விவசாயத்திற்கு மாற்றுவது உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடினமாக இருக்காது.