திருவனந்தபுரம்:
“வாலிபர் சங்கத்தினர் மட்டுமே பாலியல் வல்லுறவு செய்ய வேண்டும் என்று எழுதி வைக்கப்பட்டுள்ளதா?” என்று கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா பேசியதற்கு கேரளத்தில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. வாலிபர், மகளிர் அமைப்பினர் அவரது வீடு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செவ்வாயன்று ரமேஷ் சென்னித்தலா நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போது, பாலியல் வல்லுறவில் கைது செய்யப்பட்ட குளத்துப்புழா சுகாதார ஆய்வாளர் பிரதீப் குமார் காங்கிரஸ் சார்பு என்ஜிஓ சங்கத் தலைவரா என்று ஊடகத்தினர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சென்னிதாலா, “டி.ஒய்.எப்.ஐ.காரர்கள் மட்டுமே பாலியல் வல்லுறவு செய்ய வேண்டும் என்று எழுதி வைக்கப்பட்டுள்ளதா? “ என்று கேட்டார். பாலியல் வன்முறையை ஒரு வேடிக்கையாக கருதி, குற்றவாளிக்கு ஆதரவாக பேசியது சென்னிதலாவுக்கு கேரளத்தில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொடியேரி பாலகிருஷ்ணன்
சிபிஎம் கேரள மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் கூறுகையில், கோவிட் பாதிக்கப்பட்டவர் அல்ல என்று சான்றிதழ் பெற தன்னை அணுகிய ஒரு பெண்ணை ஒரு சுகாதார ஊழியர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தை நியாயப்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித்தலா தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும். சென்னித்தலாவின் நிலைப்பாடு மிகவும் கண்டிக்கத்தக்கது. பெண்ணியத்துக்கு சாவல் விடும் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க பெண்ணியம் போற்றும் கேரள சமூகம் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
வழக்கு பதிய வேண்டும்: மாதர் சங்கம்
ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த காங்கிரஸ் ஆதரவாளரை நியாயப்படுத்தியதற்காக எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித்தலா மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்று மாதர் சங்கத்தின் மாநிலக் குழு கோரியுள்ளது. சென்னித்தலா மன்னிக்க முடியாத குற்றத்தை பொதுமக்கள் முன் செய்தார். குற்றச் செயல்களை ஊக்குவித்ததற்காக சென்னிதலாவுக்கு எதிராக பெண்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்று மாதர் சங்கத்தின் மாநிலக் குழு அழைப்பு விடுத்துள்ளது.
முட்டாள்தனமானது: எம்.சி.ஜோசபின்
எதிர்க்கட்சித் தலைவர் என்கிற பொறுப்பான இடத்தில் இருந்துகொண்டு ரமேஷ் சென்னித்தலா முட்டாள்தனமாக நடந்து கொள்ளக் கூடாது. கேரள பெண் சமூகத்தை ஒட்டுமொத்தமாக அவமானப்படுத்துவதே இதன் பொருள். எந்த பதவியில் இருக்கும் நபர் என்றாலும் எவருக்கு எதிராகவும் பெண் விரோத கருத்துகளை கூறலாம் என்பதற்கான துணிச்சலே சென்னித்தலாவின் நிலைப்பாடு. அவர் தனது கருத்தை திரும்பப் பெற்று கேரளிய சமூகத்திடம் மன்னிப்பு கோர வேண்டும் என் கேரள மகளிர் ஆணைய தலைவர் எம்.சி.ஜோசபின் கூறினார்.