திருவனந்தபுரம்:
கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில செயலாளர் ஏ.ஏ.ரகீம் ஆகியோரை வீடு புகுந்து வெட்டி கொல்வோம் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை கேரளத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்ததுடன் நாட்டிற்கே முன்மாதிரியாக சட்டமன்றத்தில் முதல்வர் பினராயி விஜயன் தீர்மானம் கொண்டு வந்தார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு சார்பில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து சமுதாய அமைப்புகளையும் உள்ளடக்கிய மனித மகா சங்கிலியும் நடத்தப்பட்டது. இதில் வடக்கே காசர்கோடு முதல் தெற்கே களியக்காவிளை வரை சுமார் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர்.
இந்த போராட்டங்கள் நாட்டின் மதச்சார்பின்மையையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்கும் வகையில் நடத்தப்பட்டன. மத அடிப்படைவாத அமைப்புகளுக்கு இந்த இயக்கங்களில் வாய்ப்பளித்துவிடக்கூடாது என சட்டமன்றத்திலேயே சில அமைப்புகளை குறிப்பிட்டு முதல்வர் பேசினார். முதல்வரின் கருத்துக்கு கேரளத்தின் அனைத்து சமூகத்தினரும் பேராதரவு அளித்து வருகின்றனர். போராட்டங்களில் எந்த இடத்திலும் சிறு வன்முறையோ, வகுப்புவாத முழக்கங்களோ எழவில்லை. வகுப்புவாத அமைப்புகள் மக்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டன. சிஏஏவுக்கு எதிராக சில முஸ்லீம் அமைப்புகளும், ஆதரவாக சங்பரிவார் அமைப்பினரும் நடத்திய போராட்டங்களை மக்கள் புறக்கணித்தனர்.இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் முதல்வரின் நிலைபாட்டையொட்டி கேரளா முழுவதும் மாபெரும் மக்கள் இயக்கங்களை நடத்தி வருகிறது. ஊடக விவாதங்களில் பெரும்பான்மை, சிறுபான்மை வகுப்புவாதங்களை கூர்மழுங்கச் செய்யும் கருத்துகளை இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில தலைவர் ஏ.ஏ.ரஹீம் முன்வைத்து வருகிறார். இந்நிலையில் ரஹீமின் முகவரிக்கு வந்த கடிதம் ஒன்றில் முதல்வர் பினராயி விஜயனையும், ஏ.ஏ.ரஹீமையும் வீடுபுகுந்து வெட்டி கொலை செய்வதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஹீம் திருவனந்தபுரம் மாநகர காவல் ஆணையர் பல்ராம் குமார் உபாத்யாயிடம் புகார் அளித்தார்.