tamilnadu

img

விவசாயிகள், விவசாயத்தை சாகடிக்கும் சட்டங்களை திரும்பப்பெறுக... ஜூலை 27-ல் வீடுகள் தோறும் கருப்புக் கொடியேற்றி போராட்டம்

சென்னை:
மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள விவசாயிகள், விவசாயத்தை சாகடிக்கும் வகையிலான சட்டங்களை  திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி ஜூலை 27 அன்றுவீடுகள் தோறும் கருப்புக் கொடியேற்றி போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டம் மாநில தலைவர் வி.சுப்பிரமணியன் தலைமையில் ஜூலை 23 அன்று காணொலிக்காட்சி மூலம் நடைபெற்றது. கூட்டத்தில் அகில இந்திய துணைத்தலைவர் கே.பாலகிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் உட்பட மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விவசாய விரோத அவசரச் சட்டங்கள்
மத்திய பாஜக அரசு பொது முடக்கத்தை பயன்படுத்தி மக்கள் மீது அடுக்கடுக்கான தாக்குதல்களை தொடுத்து வருகிறது. அவசர சட்டங்கள், நிர்வாக உத்தரவுகள் மூலம் இந்தியாவின் நலனுக்கு விரோதமான செயல்களை தீவிரமாக செயல்படுத்துகிறது. தனியார் முதலாளிகள், கார்ப்பரேட் கம்பெனிகளின் நலன்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் அது தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மின்சார சட்டதிருத்த மசோதா 2020, அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம்,வேளாண் உற்பத்தி பொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம் 2020, விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் 2020 ஆகிய சட்டங்கள் இந்திய விவசாயிகளையும், விவசாயத்தையும் ஆழக்குழி தோண்டி புதைக்கும் மோசமான சட்டங்களாகும். இந்த சட்டங்கள் அனைத்தையும் திரும்பப்பெற வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு தமிழ்நாடு சார்பாக ஜுலை 27 அன்று வீடுகள் தோறும் கருப்புக் கொடியேற்றி மத்திய அரசுக்கு வலுமிக்க எதிர்ப்பை தெரிவிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

1 கோடி கையெழுத்து இயக்கம்
இந்தப் போராட்டத்தை முழுமையாக வெற்றியடையச் செய்வதென்று மாநிலக்குழு தீர்மானிக்கிறது. மேலும் பொதுமக்களின் பேராதரவை திரட்டும் வகையில் “ஒரு கோடி கையெழுத்து இயக்கம்” வெற்றி பெறவும். வீடுவீடாக
சென்று கையெழுத்து பெறுவதில் முனைப்புடன் ஈடுபடுவ தென்று மாநிலக்குழு முடிவு செய்துள்ளது.

தண்ணீரைப் பெறுக!
பாசனத்திற்காக மேட்டூர் அணை ஜுன் 12 அன்று திறக்கப்பட்டாலும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மாதவாரியாக தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீர் கர்நாடகத்திடமிருந்து வந்து சேரவில்லை. இதனால் திட்டமிட்ட
படி சம்பா சாகுபடிக்கு தண்ணீர் உத்தரவாதமாக கிடைக்குமா என்ற சந்தேகம் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே, தமிழக அரசு மாதவாரியாக தமிழகத்திற்குரிய தண்ணீரை பெறுவதில் உரிய கவனம் செலுத்த வேண்டும்.

வனஉரிமைக் கமிட்டிகளை கூட்டுக!
தமிழ்நாட்டின் பல்வேறு மலைப்பகுதிகளில் ஆதிவாசி மக்கள் மீது வனத்துறையினர் தாக்குதல் தொடுப்பது, பணம் பறிப்பது, பொய்வழக்கு போடுவது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர். வனஉரிமைச் சட்டம் 2006-ன் படி பட்டா வழங்குவதற்கான பல்வேறு மட்ட வனஉரிமைக் கமிட்டிகள் கடந்த ஓராண்டு காலமாக கூட்டப்படாததால் இச்சட்டப்படி மக்களுக்கு வழங்க வேண்டிய பட்டா உள்ளிட்ட உரிமைகள் வழங்கப்பட முடியாமல் இருக்கிறது.இதனால் அனுபவ நிலங்களிலிருந்து ஆதிவாசி மக்களைவெளியேற்றும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ள தற்கு மாநிலக்குழு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. தமிழக அரசு, வனஉரிமைக் கமிட்டிகளை கூட்டுவதற்கும், வனஉரிமைச் சட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் கொண்டு வரும் பால் முழுவதையும் கொள்முதல் செய்வதற்கு பதிலாகதிரும்பி அனுப்பும் செயல் நடைபெற்றுக் கொண்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்புக்கு உள்ளாகிறார்கள். எனவே, தமிழக அரசு உற்பத்தியாளர்கள் கொண்டு வரும் பால் முழுவதையும் கொள்முதல் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநில அரசின் கீழ் கூட்டுறவு அமைப்புகள் 
மாநில அரசுகளுக்கு உள்ள உரிமைகளை பறிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கூட்டுறவு அமைப்புகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு சென்றுள்ளது. இதன் விளைவாக, விவசாயிகளின் உரிமைகள் பறிக்கப்படுவதுடன், படிப்படியாக ஆரம்ப நிலை கூட்டுறவு அமைப்புகளே இல்லாமல் அழித்தொழிக்கும் வகையில் மத்திய அரசுசெயல்படுகிறது. கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறுவதற்குஅனைத்து விவசாயிகளும் மத்திய கூட்டுறவு வங்கியில்கணக்கு துவங்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தப்படு கின்றனர். விவசாய கடன் அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமேகடன் வழங்கப்பட வேண்டுமென்று நிபந்தனை விதிக்கப்படுவது போன்ற காரணங்களால் விவசாயிகள் கடன் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். கூட்டுறவு அமைப்புகள் மாநில அரசின் கீழ் தொடர்ந்து செயல்படுவதை உறுதிசெய்ய வேண்டும். கடன் கோரும் அனைத்து விவசாயி களுக்கும் நிபந்தனையின்றி விவசாயக்கடன் வழங்குவதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.