tamilnadu

img

கேரளத்தில் கனமழை - வெள்ளப்பெருக்கு கொச்சி - மதுரை சாலையில் மண்சரிவு

இடுக்கி:
இடுக்கி மாவட்டத்தில் மழை வலுவடைந்ததைத் தொடர்ந்து பெரும் சேதமும், போக்குவரத்துக்கு இடையூறும் ஏற்பட்டுள்ளது. மூணாறு பகுதியில் கொச்சி மதுரை சாலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.கேரளத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மழை வலுவடைந்து வருகிறது. இடுக்கி மாவட்டத்தில் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெள்ளி, சனி ஆகிய நாட்களில் பரவலாக காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து தடைபட்டது. வண்ணப்புறம் சப்பாத்துபகுதியில் கரைபுரண்டு வெள்ளம் ஓடுகிறது. முரிக்காசேரி - கம்பிளிக்கண்டம் வழித்தடத்தில் மூன்று இடங்களில் மண் சரிந்து போக்குவரத்து  பாதிக்கப்பட்டது. கொச்சி தனுஸ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறிலும், பெருவந்தானத்திலும் மண்சரிவு ஏற்பட்டு பல மணி நேரம் போக்குவரத்து முடங்கியது. குமுளி – முருகாடி பகுதியில் சாலையில் மழைவெள்ளம் புகுந்தது. அடிமாலி ஆனவிரட்டியில் வீட்டின் சுற்றுச்சுவர் சாய்ந்தது. ஆறுகள், கால்வாய்களில் நீர் வரத்து அதிகரித்தது. வறண்டுபோன சிறிய அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கல்லார் குட்டி, மலங்கரா, பாப்ல அணைகளில் நீர்மட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்து ஷட்டர்கள் திறக்கப்பட்டன. இடுக்கி அணையில் நீர்மட்டம் 0.87 அடி உயர்ந்து 2304.4 அடியாக உயர்ந்துள்ளது. இடுக்கி நீர்மின் திட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வியாழனன்று 12.08 செ.மீ மழை பெய்தது. கடந்த இரு தினங்களாக பெய்துவரும் மழை மேலும் வலுவடைந்துள்ளது.