திருவனந்தபுரம்:
கேரள முதல்வர் அழைப்பு விடுத்து நடத்தப்பட்ட எம்பி, எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்கிற மத்தியஅமைச்சர் வி.முரளீதரனின் அறிக்கைக்கு பதிலளித்துள்ள முதல்வர் பினராயி விஜயன் ‘பொறுப்பான இடத்தில் இருந்துகொண்டு தவறாக பேசுவோர் இப்போதும் அதை தொடர்கிறார்கள்’ என்று கூறினார்.
திருவனந்தபுரத்தில் புதனன்று கோவிட் ஆய்வுக் கூட்டத்துக்கு பிறகுநடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பினராயி விஜயன் மேலும் கூறியதாவது:கூட்டத்தின் விவரங்களுடன் மத்தியஅமைச்சர் வி.முரளீதரனின் அலுவலகஊழியரை தொடர்பு கொண்டபோது, கூட்டத்தில் பங்கேற்க அவர்களிடமிருந்து விருப்பம் தெரிவிக்கப்பட்டது. காணொலி மூலம் நடந்த கூட்டத்தின் துவக்கத்தில் அமைச்சரின் கேமராவும்இணைப்பில் இருந்தது. அவர் மற்றொருநிகழ்ச்சியில் இருப்பதாகவும், சற்றுநேரத்தில் வந்துவிடுவார் என்றும் ஊழியர் தெரிவித்தார். வீடியோ காட்சிகளை பரிசீலித்தால் இது தெளிவாகும். இங்கே முன்வைக்கப்பட்ட சில மறுப்புகள் கவனத்திற்கு வந்தன. கட்டண தனிமைக்கு உட்படுத்த மத்திய அரசின் உத்தரவு உள்ளதாக, வெளிநாடுவாழ் மலையாளிகள் ஏமாற்றப்படுகிறார்கள் என்று வி.முரளீதரன் கூறுவதை பார்க்க முடிந்தது.
28.4.2020 அன்று செய்தியாளர் கூட்டத்தில், வெளிநாட்டினரின் பிரச்சனைதெரிவிக்கப்பட்டது. அவர்கள் வீடுகளில் தனிமையை மேற்கொள்வார்கள் என்றும் அப்போது நாம் கூறினோம். 4.5.2020 அன்று விஷயங்கள் மாற்றப்பட்டன. சிறப்பு விமானத்தில் திரும்பியவர்களுக்கு முறையான மருத்துவ பரிசோதனை நடத்தப்படவில்லை. வருகிறவர்களுக்கு முறையான கோவிட் பரிசோதனை நடத்த வேண்டும் என அன்று பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது. அதன்படி முந்தைய முடிவை மாநில அரசு மாற்ற வேண்டியிருந்தது. அந்த நேரத்தில் அறிவித்தபடி விமானங்கள் வந்தால், யாரையும் நேரடியாக வீட்டிற்குஅனுப்ப முடியாது. குறைந்தது ஏழு நாட்கள் தனிமை அவசியமாகும். பரிசோதனை இல்லாமல் ஆட்கள் வருவது யார் அளித்த விவரத்தின்படி என பலரும் ஆட்சேபணை தெரிவித்தனர். விமானம் வந்த மறுநாள் இதில் ஒருவருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டது.பொறுப்பான இடத்தில் இருந்துகொண்டு தவாறக பேசுவோர் இப்போதும் அதைதொடர்கிறார்கள். மத்திய அரசு அனுப்பிய சுற்றறிக்கையும் வெளிநாடுகளில் இருந்து திரும்பி வருவோர் கையெழுத்திட்டு அளிக்கும் சத்திய வாக்குமூலத்தையும் இதுபோன்றவர்கள் படித்துப் பார்க்க வேண்டும்.
ஏழைகள் அஞ்ச வேண்டாம்
கேரளாவில் வீட்டு தனிமைப்படுத்தல் வெற்றியா தோல்வியா என்பது இங் குள்ள அனைவருக்கும் தெரியும். கேரளம் வெளிநாட்டவர்களுக்கு ஏழுநாட்கள் மட்டுமே நிறுவன தனிமைப்படுத்தல் பரிந்துரைத்தது. மத்திய அரசுஅதை எதிர்த்தது. இப்போது அதேநிலைப்பாட்டை மத்திய அரசு எடுக்கவில்லையா? வீட்டு தனிமைப்படுத்தலை அறை தனிமைப்படுத்தலாக்க மாநிலஅரசு விரும்புகிறது. இதை திறம்படசெயல்படுத்த அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கட்டணதனிமைப்படுத்தல் என்பது அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலை. கட்டணம் செலுத்தும் வசதி உள்ளவர்களிடம் இருந்து கட்டணம் பெற்றுக்கொள் ளப்படும். கேரளத்திற்கு வர விரும்பும் அனைவரையும் வரவேற்போம். எந்த ஏற்பாடுகளும் இல்லாமல் மக்கள் கூட்டமாக வந்தால், நோய் பரவுவதைத் தடுக்கமுடியாது. திட்டமிடல் மற்றும் ஒழுங்கைகடைப்பிடித்து வருபவர்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்படுவார்கள். வரும் அனைவரும் முன்னதாகவே தகவல்களை அளிக்க வேண்டும். அதற்காக அவர்கள் அரசு போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும். அதில் சமரசம் செய்ய முடியாது.
வருபவர்களில் கணிசமான பகுதியினர் கட்டணம் செலுத்தும் வசதி உள்ளவர்கள். முதல் ஏழு நாட்கள் அரசின் தனிமை மையத்தில் இருக்க வேண்டும்.அனைவரையும் வீட்டு தனிமைப் படுத்தலுக்கு அனுமதிக்க வேண்டும் எனமத்திய அரசிடம் கோரிக்கை விடுக் கப்பட்டுள்ளது. இங்கு சிகிச்சை இலவசம் என்றுதான் தெரிவிக்கப்பட்டது. வீட்டுதனிமைப்படுத்தலுக்கு வாய்ப்பு இல்லாதவர்களுக்கு, அரசு தனிமைப்படுத்தல் என்றுதான் தெரிவிக்கப்பட்டது. ஒரு சோதனைக்கு ரூ .4,000 க்கும் அதிகமாக செலவாகும். இவை அனைத்தையும் மாநில அரசு ஏற்றுக்கொள்கிறது. தனிமைப்படுத்தலுக்கான செலவை ஏற்கவசதி உள்ளவர்கள் அதை ஏற்கவேண்டும். ஏழைகளுக்கு இப்பிரச்சனையில் அச்சம் தேவையில்லை. இதற்கான விரிவான உத்தரவுகள் விரைவில் பிறப்பிக்கப்படும் என முதல்வர் கூறினார்.
வெளிநாடுகளில் 173 மலையாளிகள் பலி
கோவிட் நோய் தொற்றுக்கு உள்ளாகி வெளிநாடுகளில் 173 மலையாளிகள் உயிரிழந்தனர். இது வேதனை அளிப்பதாகும். அவர்களது குடும்பத்தினரின் துயரத்தில் பங்கேற்கிறோம். கேரளத்தில் புதனன்று மேலும் 40 பேருக்கு கோவிட் தொற்று உறுதியானது. இதில் 16 பேர் மகாராஷ்டிரத்தில் இருந்து வந்தவர்கள். தமிழ்நாடு 5, தில்லி 3, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, உத்தரபிரதேசம் தலா 1. வெளிநாடுகளில் இருந்து வந்த 9 பேருக்கு நோய் உறுதியானது. தொடர்பின் ஊடாக 3 பேருக்கும் நோய் வந்துள்ளது. புதனன்று 10 பேரது பரிசோதனை முடிவுகள் அவர்களுக்கு நோய் இல்லை என வந்துள்ளது.