tamilnadu

img

மக்கள் தொகை பதிவேடு கேள்விகளுக்கு பதிலளிக்காதீர்! குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வீடுகள் தோறும் பிரச்சாரம் செய்வோம் ; சீத்தாராம் யெச்சூரி பேட்டி

திருவனந்தபுரம், ஜன.19- குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் வீடுகள்தோறும் பிரச்சாரம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார். என்ஆர்சியின் முதல்படியே என்பிஆர் எனவும், என்பிஆர்-க்காக யாரும் விவரங்கள் தெரிவிக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். திருவனந்தபுரத்தில் ஜனவரி 17, 18, 19 மூன்று நாட்கள் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கூட்டத்தின் முடிவு களை விளக்கி ஞாயிறன்று செய்தியாளர்களிடம் சீத்தாராம் யெச்சூரி மேலும் கூறியதாவது: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் மீதான காவல்துறை அத்து மீறல்களை மத்தியக்குழு கண்டிக்கிறது. போராட்டங்கள் அமைதியான முறையில் நடத்தப்படுகின்றன. இனியும் அவ்வாறே நடைபெறும். பாஜக ஆளும் மாநிலங்களில்தான் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொல்லப் பட்டுள்ளனர். காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதால் இந்த மரணங்கள் ஏற்பட்டன. உத்தரப்பிரதேசத்தில் 21, அசாமில் 5, கர்நாடகாவில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப் பாட்டில் காவல்துறை செயல்படும் தில்லியிலும் அத்துமீறல்கள் நடந்துள்ளன. உத்தரப்பிரதேச முதல்வரின் பேச்சைத் தொடர்ந்து, காவல்துறையினர், மக்களின் சொத்துகளை தகர்க்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைலராகி வருகிறது. ஆனால், நிரபராதிகள் மீது குற்றம்சாட்டுகின்றனர். விடுதலை இந்தியாவில் இதற்கு முன் எப்போ தும் இத்தகைய சம்பவங்கள் நடந்ததில்லை. நாட்டில் குடியுரிமை மறுக்கப்படு வோருக்கான தடுப்பு முகாம்கள் ஒழிக்கப்பட வேண்டும். புதிய தடுப்பு முகாம்கள் அமைப் பதை அரசு கைவிட வேண்டும். மத்திய அரசிட மிருந்து வரும் இத்தகைய உத்தரவுகளை மாநிலங்கள் புறக்கணிக்க வேண்டும்.   முப்படைத் தளபதி அரசியல் விளையாட்டில் ஈடுபடுகிறார். இந்திய ஜனநாயகத்தில் இதனை அங்கீகரிக்க முடியாது. காஷ்மீரில் அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். தகவல் தொடர்பு சாதனங்கள் புனரமைக்கப்பட வேண்டும். போக்குவரத்து வசதிகள் இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட வேண்டும். மோடியின் ஆட்சியில் பெரும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. வேலையின்மை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. மக்கள்  வேலை இழக்கிறார்கள். கேரளம் மீது பொரு ளாதார பாகுபாட்டை மத்திய அரசு காட்டி வருகிறது. மத்திய அரசு அரசமைப்பு சாசனத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. மாறாக, அரசியல் செயல்பாடுகளில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறது. ஆளுநர் இந்திய அரசமைப்பு சாசனத்தை படிக்க வேண்டும் என்பதை மட்டும் கூற வேண்டியிருக்கிறது. பல மாநிலங்களிலும் ஆளுநர்களின் நிலைப்பாடு கேள்வி கேட்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றுபட்டு நடத்தப்படும் அனைத்து போராட்டங்களுக்கும் மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளிக்கும். மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது, மக்கள்தொகை பதிவேட்டுக்கான கேள்விக்கு நாட்டு மக்கள் பதிலளிக்க வேண்டாம்; அது ஆபத்தானது என்ற பிரச்சாரத்தை வீடு வீடாக மேற்கொள்வோம்; ஒன்றுபட்ட போராட்டம் தேர்தலை நோக்கமாக கொண்டதல்ல. நாட்டைப் பாதுகாக்காமல் சிறந்த இந்தியாவை உருவாக்க முடியாது. இவ்வாறு யெச்சூரி கூறினார்.