திருவனந்தபுரம், ஜுலை 8- தங்கக் கடத்தல் வழக்கில் குற்றவாளியான யுஏஇ தூதரக முன்னாள் ஊழியர் சரித்தின் கூட்டாளியும் பாஜக பிரமுகருமான சந்தீப் நாயர் தலைமறைவானதைத் தொடர்ந்து அவரது மனைவி சவுமியாவை சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களது கொச்சி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். திருவனந்தபுரம் விமானநிலை யத்தில் கடந்த வாரம் துபாயிலிருந்து சரக்கு விமானத்தில் ஐக்கிய அமீரக த்தின் தூதரகத்துக்கு வந்த பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டது. இது தொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்தின் முன்னாள் மக்கள் தொடர்பு அலுவலரான சரித்.கைது செய்யப்பட்டார். சரித்தின் முக்கிய கூட்டாளிகளாக தூதரக முன்னாள் ஊழியரான சொப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உள்ளிட்ட சிலரை சுங்கத்துறையினர் தேடி வருகின்றனர். இந்நிலையில் சந்தீப் நாயரின் வீட்டில் சோதனை மேற்கொண்ட சுங்கத்துறையினர் அவரது மனைவி சவுமியாவை கொச்சியில் உள்ள ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அங்கு வந்த சிபிஐ அதிகாரிகள் இருவர் அரைமணி நேரத்துக்கு பிறகு அங்கிருந்து திரும்பிச் சென்றனர். இதன்மூலம் சிபிஐ விசாரணைக்கு இந்த வழக்கு செல்ல வாய்ப்பு அதிகரித்துள்ளது. சந்தீப் நாயர் திருவனந்தபுரத்தில் கார்பன் டாக்டர் என்கிற கார் பழுதுபார்க்கும் பணிமனை நடத்தி வந்தார். தன்னை பாஜக வைச் சேர்ந்தவராக முகநூலில் பதிவில் பிரகடனப்படுத்தியுள்ளார். சந்தீப் நாயர் பாஜக மூத்த தலைவரும் மிஜோரம் மாநில முன்னாள் ஆளுநருமான கும்மனம் ராஜசேகரனுடன் கட்டிப்பிடித்தபடி நிற்கும் புகைப்படத்தையும் முகநூலில் பதிவிட்டுள்ளார்.
சொப்னாவை பரிந்துரைத்த காங்கிரசார்
தங்கம் கள்ளக்கடத்தல் தொடர்பாக தேடப்பட்டுவரும் சொப்னா சுரேஷ் ஏர்இந்தியா சாட்டிஸில் நியமனம் பெற காங்கிரஸ் கட்சியின் எம்பியும் முன்னாள் மத்திய துணை அமைச்சர்கள் இருவரும் 2013இல் பரிந்துரைத்ததாக ஏர்இந்தியா சாட்டிஸ் துணை தலைவராக இருந்த பினோய் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.