திருவனந்தபுரம்:
பிஎம் கேர்ஸ் நிதி விநியோகம் தொடர்பான நிபந்தனைகளில் மாறுதல் செய்யப்பட வேண்டும் என பிரதமருக்கு அனுப்பிய இ-மெயில் கடிதத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.
விருந்தினர் (வெளிமாநில) தொழிலாளர்களுக்கு தங்குமிடம்,சிகிச்சை, உணவு, பயணம் ஆகியவற்றுக்கு மட்டுமே இந்த நிதி அனுமதிக்கப்படுகிறது. ஏற்கனவே இதற்காக செலவழித்த தொகையை கோர முடியாது என்று மத்திய அரசு கூறியுள்ளது.மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒதுக்கப்பட்ட பி.எம் கேர்ஸ் நிதியின் அளவு மூன்று காரணிகளை அடிப்படை யாகக் கொண்டது. 1) 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மக்கள்தொகைக்கு 50 சதவிகிதம் வெயிட்டேஜ். 2) இதுவரை உள்ளகோவிட் நோயாளிகளின் மொத்த எண்ணிக்கையில் 40 சதவிகிதம் வெயிட்டேஜ். 3) மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சமபங்களிப்பில் 10 சதவிகிதம் வெயிட்டேஜ். அந்தந்த மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் உள்ள விருந்தினர் தொழிலாளர்களின் நலனுக்காக செலவிடப்படும் தொகை அங்குள்ள விருந்தினர் தொழி லாளர்களின் எண்ணிக்கையை சார்ந்திருக்கும். எனவேதான், 2011மக்கள் தொகையில் 50 சதவிகிதம் வெயிட்டேஜ் வழங்குவதற்குப் பதிலாக ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங் களில் உள்ள விருந்தினர் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் 50 சதவிகிதம் வெயிட்டேஜ் வழங்க வேண்டும் என கேரள முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கேரளத்தில் 4.85 லட்சம் விருந்தினர்தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களுக்குஉணவு மற்றும் தங்குமிடம் வழங்குவதற்கும்அவர்களின் நலனை உறுதி செய்வதற்கும் கேரள அரசு முன்மாதிரியான தலையீடுகளை செய்து வருகிறது. எவ்வாறாயினும், கடந்த கால செலவுகளை கோர முடியாது என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்துள் ளது, இதுவரை விருந்தினர் தொழிலாளர் களுக்காக செலவிடப்பட்ட தொகையை கேரளாவால் வசூலிக்க முடியவில்லை. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் முதல்வர் தனது கடிதத்தின் மூலம் பிரதமரிடம் கோரியுள்ளார்.