கரூர், செப்.18- விவசாயிகளின் நில உரிமையையும் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் 1885-ம் ஆண்டு சட்டத்தை கைவிட்டு, விவசாயிகளுக்கு புதிய சட்டத்தை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்க கரூர் மாவட்டக் குழு சார்பில் 1885 நகல் எரிக்கும் போராட்டம் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.இலக்குவன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் பொன்னுசாமி சிறப்புரையாற்றுகையில், கரூர் மாவட்டத்தில் பரமத்தி, தென்னிலை போன்ற இடங்களில் விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்களை நடத்தி வந்தனர். உயர் மின் கோபுரம் அமைக்கும் இடத்திற்கு செல்லும் இடத்திலும் இழப்பீடு அல்லது வாடகை தீர்மானிக்கக் கூடிய விதிமுறைகளை மாநில அரசு உருவாக்க வேண்டும் என்று மின்சாரத் துறையின் சட்டம் 2003 பகுதி-8 பிரிவு-இ குறிப்பிடுகிறது. இந்த சட்டப்படி வாடகை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் உயர்மின் கோபுரத்திற்கு வாடகை வழங்கப்படவில்லை என்று மின்துறை அமைச்சர் கூறுகிறார். செல்போன் டவருக்கு வாடகை வழங்கும்போது உயர் மின் கோபுரத்திற்கு ஏன் வாடகை வழங்கக்கூடாது. இந்த சட்டத்தை மாற்ற வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒன்றுகூடி இந்திய தந்தி சட்டம் 1885 நகலை எரிக்கும் போராட்டம் நடத்துகிறோம் என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி, விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் ராஜாங்கம், மாவட்டக் குழு உறுப்பினர் சக்திவேல், ஒன்றியச் செயலாளர்கள் அய்யர், வீரமலை, தண்டபாணி, சண்முகம், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட நிர்வாகி ராஜமணி ஆகியோர் பேசினர். மேலும் சட்ட நகல் எரிக்க முயன்ற 50-க்கும் மேற்பட்டோரை தான்தோன்றிமலை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.