முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து டுவிட்டரில் அவதூறாக பதிவிட்ட கரூர் பாஜக நிர்வாகி விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூகவலைத்தளங்களில் அவதூறு கருத்து பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் கரூர் மாவட்டம் வாங்கலை அடுத்த முனியப்பனூரை சேர்ந்தவர் பாஜக இளைஞரணி நிர்வாகி விக்னேஷ். இவர் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக முதல்வர் குறித்து அவதூறு கருத்து பரப்பியுள்ளார்.
இதுகுறித்து திமுக தகவல் தொழில்நுட்ப அணி கொடுத்த புகாரின் பேரில் முனியப்பனூர் வீட்டிலிருந்த பாஜக நிர்வாகி விக்னேஷை போலீசார் கைது செய்தனர்.
இதேபோன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் 4 நாட்கள் பயணமாக துபாய் சென்றிருந்தார். அப்போது அவர் உடுத்திருந்த உடை குறித்து அவதூறு பரப்பியதாக எடப்பாடியை சேர்ந்த பாஜக நிர்வாகி அருண் பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.