பெங்களூரு:
பாஜக தலைவர் பி.எஸ். எடியூரப்பா, 4-ஆவது முறையாக கர்நாடக மாநில முதல்வராக பதவியேற்றுள்ளார்.அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக்காப்புப் செய்து வைத்துள்ள ஆளுநர் வாஜூபாய்வாலா, எடியூரப்பா ஜூலை 31-ஆம் தேதிக்குள்பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. எச்.டி. குமாரசாமி முதல்வராகபதவி வகித்து வந்தார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10 எம்எல்ஏ-க்கள் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த 3 எம்எல்ஏ-க்கள் திடீரென தங்களின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகர்அலுவலகத்தில் கடிதம் கொடுத்தனர். ரூ.30 கோடி வரை பணம் தருவதாக பாஜக நடத்திய பேரத்தின் அடிப்படையிலேயே எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்தார்கள் என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்தாலும், மறுபுறத்தில்,ஆளும் கூட்டணி கர்நாடக சட்டப்பேரவையில் தங்களின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில், நம்பிக்கை வாக்கெடுப்புக்குதயார் என்று முதல்வர் குமாரசாமி அறிவித்தார்.அதன்பேரில், ஜூலை 22-ஆம் தேதி மாலை 7 மணியளவில் கர்நாடக சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடைப்பெற்றது.
இதில், அரசுக்கு எதிராக 105 பேரும், ஆதரவாக 99 பேரும் வாக்களித்ததால், பாஜக எதிர்பார்த்தபடியே குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது. இதனால் உடனடியாக குமாரசாமி தனது பதவியை ராஜினாமா செய்தார்.எனினும், தனிப்பெரும்பான்மை இல்லாததால், புதிய ஆட்சியமைப்பது தொடர்பாகஉடனடி முடிவு எதையும் மேற்கொள்ளாத பாஜக-வினர், பிரதமர் மோடி, பாஜக தலைவர்அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தனர்.இதனிடையே, வெள்ளிக்கிழமையன்று காலை, கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவைச் சந்தித்த பாஜக தலைவர் எடியூரப்பா, ஆட்சியமைக்க உரிமைக் கோரினார். 224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில், பெரும்பான்மைக்குத் தேவையான 113 உறுப்பினர்கள் இல்லாத நிலையில்,பாஜக, எவ்வாறு ஆட்சியமைக்க உரிமை கோர முடியும்? என்றெல்லாம் யோசிக்காமல்,ஆளுநரும் எடியூரப்பாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார்.இதையடுத்து, மாலை 6.30 மணியளவில், ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில், கர்நாடகத்தின் 25-ஆவது முதல்வராக எடியூரப்பாவுக்கு ஆளுநர் வஜூபாய் வாலா முதல்வராகபதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதைத்தொடர்ந்து, எடியூரப்பா கடவுளின் பெயரால் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.