tamilnadu

img

பஞ்சாப், ஹரியானா, இமாச்சலில் 22 சதவிகிதம் பேர் வேலையிழப்பு....

சண்டிகர்:
பஞ்சாப், ஹரியானா, இமாசலபிரதேசம் ஆகிய மூன்று வட இந்திய மாநிலங்களில் பொதுமுடக்கம் காரணமாக, 22 சதவிகித தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாகவும், 31 சதவிகிதம்பேர் பகுதி வேலையின்மையை எதிர்கொண்டிருப்பதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.பஞ்சாப் பல்கலைக்கழக “யுனிவர்சிட்டி பிசினஸ் ஸ்கூலின் (யுபிஎஸ்) வணிக மற்றும் பொருளாதார கொள்கை ஆராய்ச்சி குறித்த குழு, இதுதொடர்பான ஆன்லைன் கணக்கெடுப்பை மேற்கொண்டது.

பஞ்சாப் பல்கலைக்கழக வணிகப் பள்ளியைச் சேர்ந்த குல்விந்தர் சிங் மற்றும் குன்மலா சூரிமற்றும் பாட்டியாலாவில் உள்ள பஞ்சாபி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிர்வைர் சிங் ஆகிய மூன்று வல்லுநர்கள் அடங்கிய குழு இந்த ஆய்வை
நடத்தியது. இதில் மொத்தம் 510 பதில்கள் பெறப்பட்டன. அந்த பகுப்பாய்வின் அடிப்படையில், பஞ்சாப், ஹரியானா, இமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பொதுமுடக்கத்தின் 1.0 காலத்தில், வேலைவாய்ப்பின்மை பெரிய அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும், 22 சதவிகித தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்; 31 சதவிகிதம் பேர் பகுதி வேலையின்மையை எதிர்கொள்ள நேரிட்டது.

அதாவது அவர்கள் தொழில்களை விட்டு வெளியேற நேரிட்டது அல்லது ஒரு வேலையிலிருந்து வருமானத்தின் சரிவை சந்தித்திருக்கிறார்கள்” என்றும் தெரிய வந்துள்ளது.ஒட்டுமொத்த பகுப்பாய்வில், இந்த மாநிலங்களில், நாடு தழுவிய பொதுமுடக்கக் காலகட்டத்தில், 54 சதவிகிதத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள் ளது. குறிப்பாக, முறைசாரா துறையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துறையில் 80 சதவிகிதத் தொழிலாளர்கள் முழுமையான வேலையின்மையை எதிர்கொண்டனர் என்று கூறப்பட்டுள்ளது.நகர்ப்புறங்களில் 19 சதவிகித தொழிலாளர் களுக்கும், கிராமப்புறங்களில் 30 சதவிகித தொழிலாளர்களுக்கும் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் நகர்ப்புறங்களில் பகுதி வேலையின்மை மிக அதிகமாக- 32 சதவிகிதம் என்ற அளவிற்கு உள்ளது.விவசாயிகள் 38 சதவிகிதம் என்ற அளவிற்குஅதிகபட்ச வேலையின்மையை எதிர்கொண் டுள்ளனர். அதைத் தொடர்ந்து சுயதொழில் செய்வோர் உள்ளனர். அரசுத் துறையிலும் 5 சதவிகித தொழிலாளர்கள் வேலையின்மையை சந்தித்துள்ளனர்.

வயது அதிகமுள்ள தொழிலாளர்களுடன் ஒப்பிடும்போது இளம் வயது தொழிலாளர்கள் அதிகமாக, வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர். முழு மற்றும் பகுதி வேலையின்மையைப் பொறுத்தவரை பெண்களை விட ஆண்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.