tamilnadu

img

அசாமில் 19 லட்சம் பேரின் குடியுரிமை ரத்து

கவுகாத்தி:
அசாம் மாநிலத்திற்கான, தேசிய குடியுரிமைப் பட்டியலை வெளியிட்டுள்ள மத்திய பாஜக அரசு, அதில்19 லட்சம் பேரின் குடியுரிமையை நீக்கியுள்ளது. இது அசாம் மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. இந்நிலையில், இரண்டுமுறை எம்எல்ஏ-வாக தேர்வு செய்யப்பட்ட2 எம்எல்ஏ-க்கள் உட்பட முன்னாள் ராணுவத்தினர் மற்றும் சிஆர்பிஎப் வீரர்களது குடும்பத்தினர் பெயர்களும் குடியுரிமைப் பட்டியலில் இருந்து, நீக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தின் கட்டிகோர் தொகுதியைச் சேர்ந்தவர் அதுர் ரகுமான் மஜர்புயான். அகில இந்திய ஜனநாயக முன்னணி (AIUDF) கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஆவார்.

இவரதுகுடியுரிமை தற்போது பறிக்கப்பட்டுள்ளது. இதே கட்சியைச் சேர்ந்த மற்றொரு சட்டமன்ற உறுப்பினர் தென்அபயபுரி அனந்தகுமார் மாலோ மற்றும் அவரது மகனுக்கும் குடியுரிமை இல்லை. தல்கான் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ இலியாஸ் அலியின் மகள் பெயரும் குடியுரிமைப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. பிரபல ‘டைம்ஸ் நவ்’ பத்திரிகையில் பணியாற்றி வருபவர் பர்வினா புர்கயாஸ்தா. இவர் பிரபல பத்திரிகையாளராக இருந்தும் கூட அசாம் குடியுரிமைப் பட்டியலில் அவரது பெயர் இல்லை. இவ்வளவுக்கும், பர்வினாவின் தந்தை முன்னாள் சிஆர்பிஎப் வீரர். அவரது தயார் மேகாலய மாநில காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 1987 முதல் 30 ஆண்டுகளாக ராணுவத்தில் பணிபுரிந்தவரும், கார்கில் போர் வீரருமான முகம்மது சனாவுல்லாவின் குடியுரிமை ஏற்கெனவே பறிக்கப்பட்டுவிட்டது. அண்மையில் அவர் மீது கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. சனாவுல்லா தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், இறுதிப்பட்டியலிலும் அவரது பெயர் இடம்பெறவில்லை. சனாவுல்லாவின் மகனும் கவுகாத்தி உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான ஷோபிதுல் இஸ்லாமின் குடியுரிமையும் பறிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சனாவுல்லாவின் மனைவிக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.