நாகர்கோவில், ஏப்.1- கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே கொடுப்பைக்குழி பகுதியில் கோவில் கட்டிட பணிகளுக்காக நாகை மாவட்டம் வத்தலகுண்டை சேர்ந்த 25 தொழிலாளர்கள் கடந்த ஒரு மாதமாக குடும்பத்துடன் தங்கி வேலைபார்த்து வந்தனர். இதனிடையே கோவிட் 19 தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவால் இவர்கள் சொந்த ஊர் போக முடியாமலும், உணவின்றியும் தவித்து வந்தனர். வாகன போக்குவரத்துகள் இல்லாததால் வேறு வழியின்றி கொடுப்பைக்குழி பகுதியில் இருந்து நாகை மாவட்டத்திற்கு குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் நடந்தே செல்ல முடிவு செய்தனர். இவ்வாறு அவர்கள் நடந்து நாகர்கோவில் பகுதியில் வரும்போது வாகன சோதனைகளில் ஈடுபட்டு இருந்த காவல் துறையினர் அவர்களை தடுத்து விசாரித்தனர். பின்னர், அவர்கள் சொந்த ஊர் செல்ல வாகன வசதி ஏற்படுத்தி நாகர்கோவிலில் இருந்து வழியனுப்பி வைத்தனர். காவல்துறையினரின் மனிதாபிமானமான இந்த சேவையை அனைவரும் பாராட்டி சென்றனர்.