உத்திரமேரூர், டிச.15- காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் கூட்டுரோடு அருகே உள்ளது கருணாகரச்சேரி கிராமம். இங்கு செயல்படும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். 40 ஆண்டுகளுக்கு முன்பு இப்பள்ளியின் கட்டிடம் கட்டப்பட்டதால் தற்போது பாழடைந்து காணப்படுகிறது. மேலும் கட்டிடத்தின் மேலே செடிகள் வளர்ந்து உள்ளது. இதன் வேர்கள் சுவர்களில் ஊடுருவி உள்ளதால் சுவர்களில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு, இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் பள்ளியின் அருகே கழிவுநீர் தொட்டி மூடப்படாமல் அங்கு புதர் செடிகள் அதிகம் வளர்ந்துள்ளது. இரண்டு வாரம் முன்பு பெய்த மழையால் அங்கு மழைநீர் தேங்க கழிவுநீர் தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளது. இடைவேளை நேரத்தில் பள்ளிக் குழந்தைகள் உணவு மற்றும் விளையாடும் இடமாக பயன்படுத்துவதால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளியின் கட்டிடத்தை சமூக விரோதிகள் கூடாரமாகவும் பயன்படுத்துவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். எனவே அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன்பாக மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் பழைய கட்டிடத்தை மாற்றி புதிய கட்டிடம் கட்டித் தரவேண்டும், கழிவுநீர் தொட்டியை சரி செய்ய வேண்டும் என பெற்றோர்களும் சமூக ஆர்வளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.