காஞ்சிபுரத்தில் அரசு பள்ளி மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
காஞ்சிபுரம் அருகே காவாந்தண்டலத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 115 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இப்பள்ளியில் மூன்று பழைய கட்டடங்கள் மற்றும் இரு புதிய கட்டடங்கள் உள்ளன. 1965-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட பழைய கட்டடத்தில் 2-ஆம் வகுப்பு மற்றும் 3-ஆம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மழைக் காலம் வந்துவிட்டால் வகுப்பறை முழுவதும் ஒழுகத் தொடங்குவதாகவும் இதற்கு மாற்றாக புதிய கட்டடம் கட்ட வேண்டும் எனவும் பள்ளி நிர்வாகம் சார்பில் அரசுக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
ஆனால், பள்ளியின் கோரிக்கை பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், நேற்று (திங்கட்கிழமை) மதியம் அந்த பழைய கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக மாணவ மாணவியர் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இது குறித்து தலைமை ஆசிரியர் திருமலைவாசன் கூறுகையில், “கட்டடம் மிகவும் சேதமடைந்துவிட்டதால் பத்து நாட்களுக்கு முன்புதான் அந்த கட்டடத்திலிருந்த மாணவர்களை வேறு கட்டிடத்தில் அமர வைத்தோம். இதனால், நல்ல வேளையாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை” என கூறியுள்ளார்.