காஞ்சிபுரம், மே 29-கோவில் நகரம் எனப் பெயர் பெற்றகாஞ்சிபுரம் சமீப காலமாக சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. காஞ்சிபுரத்தை அடுத்த மாரியம்மன் கோவில் தெரு சிட்டியம்பாக்கம் கிராமத்தைச்சேர்ந்தவர் நவீன் குமார் (வயது 15) 10ஆம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் உள்ளார். செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் காஞ்சிபுரம் செல்கிறேன் எனக் கூறிவிட்டு வீட்டை விட்டுச் சென்ற நவீன் புதன்கிழமை காலை வரை வீட்டிற்குத் திரும்பவில்லை.இந்நிலையில் காஞ்சிபுரம் பெருநகராட்சிக்கு உட்பட்ட 12 வது வார்டு வெள்ளைகுளம் தெரு பகுதியில் இயங்கும் தனியார்சிபிஎஸ்இ பள்ளி அருகே உள்ள வயல்வெளியில் நவீனின் சடலம் கிடந்தது. சடலம் கிடந்த இடத்தில் நவீனின் இருசக்கரவாகனமும் அதன் அருகே இரண்டு உருட்டுக் கட்டைகளும் இருந்தன.அதனைக் கண்ட அப்பகுதிமக்கள், மர்ம நபர்கள் சிறுவனை அடித்துக் கொன்றிருக்கலாம் என்றரீதியில் சிவகாஞ்சி காவல் துறைக்கு தகவல் அளித்தனர். உடனே சிவகாஞ்சி காவல்துறையினர் விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரு பிரிவினர் மத்தியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நவீனை அடித்து கொலை செய்திருக்கலாம் என்ற தொனியிலும் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்றத் தொகுதி செயலாளர் பாசறை செல்வராஜ் செய்தியாளரிடம் கூறும்போது, பள்ளிச் சிறுவன் அடித்துக் கொல்லப்பட்டது என்பது சந்தேகத்திற்கு இடமாக உள்ளது. மூன்று தினங்கள் முன்பாக வன்னியர் சங்க குருவின் பேனர் கிழிக்கப்பட்டது சம்பந்தமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்பதால் தீவிர புலன் விசாரணை செய்து குற்றவாளிகளைக் கைதுசெய்ய வேண்டும் என்றார்.விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், மக்கள் மன்றத்தினர், சிறுவனின் தந்தை முனுசாமி, கிராம மக்கள் ஆகியோர் காஞ்சிபுரம் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் எஸ்.பாலசுப்ரமணியத்தைச் சந்தித்து இவ்வழக்கை வன்கொடுமை சட்டத்தின் கீழ் பதிவு செய்து கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.