tamilnadu

img

பணி நிரந்தரம் என்ற அறிவிப்பால் முதல்வர் படத்தை வாயால் வரைந்து நன்றி  

திருக்கோவிலூர் அருகே பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்பிற்கு,  நன்றி தெரிவிக்கும் விதமாக திருக்கோவிலூர் அருகே ஓவிய ஆசிரியர் ஒருவர் முதல்வர் மற்றும் கல்வி அமைச்சரின் படங்களை வாயால் வரைந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.  

கடந்த 2012 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இருந்தபோது அரசு பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை மற்றும் வாழ்க்கை கல்வி ஆகியவற்றை மாணவர்களுக்கு கற்பிக்கும் வகையில் ரூ.5,000 ஊதியத்தில் 16 ஆயிரத்து 549 பேர் பகுதி நேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு சம்பளம் படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்போது 10ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இவர்களில் தற்போது சுமார் 12,000 பேர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். தங்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும் என பல ஆண்டுகளாக இவர்கள்‌ தமிழக அரசை வலியுறுத்தி வந்தனர். இதை திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்து, பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.  இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக  மணலூர்பேட்டையை சேர்ந்த சு.செல்வம் பணிபுரிந்து வருகிறார். பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று சமீபத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவித்தார். இவ்வாறு அறிவித்த பள்ளிக் கல்வித்துறைக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக முதல் அமைச்சர் ஸ்டாலின் படத்தை வாயில் பிரஷ் பிடித்து வரைந்துகொண்டு இருக்கும்போதே ஒருகையால் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி படத்தையும், மற்றொரு கையால் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் படத்தையும் ஒரேநேரத்தில் வரைந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.