கள்ளக்குறிச்சி. ஜூன் 6- பொதுமுடக்கம் தளர்வு காரணமாக இயக்கப்படும் அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கை போதிய அளவு இல்லாததால் மாவட்டம் முழுவதும் பேருந்து நிலையங்களில் பயணிகள் நீண்ட நேரம் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தேவைக்கேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் அரசுப் பேருந்து இயக்கப்படுகிறது. பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டு 50 விழுக்காடு பேருந்துகளும், 50 விழுக்காடு பயணிகளும் என கணக்கிட்டு ஒரு பேருந்துக்கு அதிகபட்சம் 30 பேர் என பயணம் செய்ய அரசு அனுமதி அளித்தது. மூன்றாவது மண்டலமாக அறிவிக்கப்பட்ட கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 4 மாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. முதல் இரண்டு, மூன்று நாட்கள் 50 விழுக்காட்டிற்கு குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டன.
துணிக்கடைகள், சிறு நிறுவனங்கள், கட்டுமானத் தொழிலில் ஈடுபடுவோர் என பலரும் நகரங்களுக்கு பயணம் செய்ய வேண்டியதுள்ளது. அதேபோல் திருமணம் உள்ளிட்ட விழாக்களின் காரணமாக கிராமப்புற மக்கள் பேருந்து நிலையத்திற்கு அதிக அளவில் வருகின்றனர். இருக்கும் பேருந்துகளில் கூடுதலான பயணிகள் ஒரே நேரத்தில் செல்ல நேர்வதால் நோய் பரவும் அபாயமும் உள்ளது. ஆனால் பணிமனைகளில் இருந்து குறைவான பேருந்துகளே இயக்கப்படுவதால் ஆங்காங்கே பேருந்து நிலையங்களில் பயணிகள் மணிக்கணக்கில் காத்துக் கிடக்கின்றனர். அதிலும் இரவு நேரங்களில் கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரிவோர், கூலித்தொழிலாளர்கள் குறிப்பாக இளம் பெண்கள் வீடு திரும்ப பேருந்து இல்லாமல் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
எனவே தனியார் பேருந்துகள் இயங்காத நிலையில் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோயிலூர், சங்கராபுரம், சின்னசேலம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் இருந்து கூடுதலான அரசு பேருந்துகளை இயக்க வேண்டும். பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதால் ஒரே நேரத்தில் கூட்டமாக பயணிகள் பேருந்துகளில் ஏறுவதை தவிர்க்கவும், தொழிலாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் சச்சரவு ஏற்படாமல் தடுக்கவும், தனிமனித இடைவெளி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகவும் பேருந்து நிலையங்கள் மற்றும் நிறுத்தங்களில் காவல்துறையினரை நியமிக்கப்பட வேண்டும் என அரசுப் பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுநர், நடத்துநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.