உளுந்தூர்பேட்டை, ஜூன் 16- கள்ளக்குறிச்சி மாவட்டம் கிளியூர் கிரா மத்தில் சாதிமறுப்பு காதலர்களையும், அப்பகுதி தலித் மக்களையும் அச்சுறுத்தி வரும் சாதிவெறி நபர்கள் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கள்ளக்குறிச்சி மாவட்டக்குழு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மாவட்டச் செயலாளர் இரா.பூமாலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது; கிளியூர் கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞர் இளங்கோவனும், பூவனூர் கிரா மத்தில் வசிக்கும் மாற்று சமூகத்தைச் சேர்ந்த சுகன்யா என்பவரும் ஆறு ஆண்டுகளுக்கு மேல் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் சுகன்யாவின் விருப்பத்திற்கு மாறாக வேறு நபருக்கு திருமணம் செய்ய அவரது குடும் பத்தார் முயன்றதால் காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதனை சாதி பிரச்சனையாக மாற்ற கிளி யூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராஜ், வார்டு கவுன்சி லர் கணேசன், பைனான்சியர் சிலம்பு, ஐயப் பன் உள்ளிட்டோர் சாதிக் கூட்டம் நடத்தி "இரு வரையும் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லையென்றால் பெரும் விளைவுகளை நீங்கள் சந்திப்பீர்கள்" என இளங்கோவனின் குடும்பத்தினரையும், கிளியூர் தலித் மக்களை யும் மிரட்டியுள்ளனர். மேலும் 250க்கும் மேற்பட்ட மாற்று சாதி சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கையில் ஆயுதங்களுடன் கிளி யூரில் தலித் மக்கள் வசிக்கும் பகுதியை நோக்கி விரைந்துள்ளனர். இதை அறிந்த தலித் மக்கள் பீதியில் வீடுகளுக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் தகவலறிந்து வன்முறை நடக்காமல் தடுப்பதற்காக வந்த காவல்துறை யினரை மாற்று சமூகத்தைச் சேர்ந்த கோபி என்ற சாராய வியாபாரி கல்வீசி தாக்கியுள் ளார். இதன்பின் கூட்டத்தில் வந்திருந்த பல ரும் காவல்துறையின் மீது கல் வீசியதில் ஆய்வாளர் விஜி, உதவி ஆய்வாளர் ஜெயச் சந்திரன், வினோத்குமார் உள்ளிட்டோர் 6 காவல்துறையினர் காயமடைந்துள்ளனர். இதனையொட்டி காவல்துறையினர் 169 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருமணப் பருவத்தை கடந்த காதலர் கள் இளங்கோவன், சுகன்யா ஆகியோ ருக்கும், இளங்கோவனின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி தலித் மக்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், சுகன்யா குடும்பத்தினர் இப்பிரச்சனையை சட்டரீதி யாக தீர்த்துக்கொள்ள காவல்துறையை அணுகிய நிலையில் இதனை சாதி வெறி மோதலாக மாற்றிட சாதிய கூட்டம் நடத்திய நபர்கள் மீதும், தலித் மக்கள் மீது தாக்கு தல் தொடுக்க திரண்டு வந்த சாதி ஆதிக்க நபர்கள் மீதும் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.