கட்டடம்விழுந்து பெண் உயிரிழந்த சம்பவத்தில், மாநகராட்சி அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
சென்னை அண்ணா சாலை, ஆனந்த் தியேட்டர் பேருந்து நிறுத்தம் அருகே பழைய கட்டடம் ஒன்று பாதுகாப்பின்றி வெள்ளியன்று (ஜன.27) இடிக்கப்பட்டு வந்தது. கட்டிடத்தை உட்புறமிருந்து இடித்துக் கொண்டு இருந்தபோது, அந்த வழியே சென்ற 3 பேர் மீது கட்டிடம் சரிந்து விழுந்தது. இதில், மதுரையை சேர்ந்த பத்மபிரியா (வயது22) உயிரிழந்தார். வாலிபர் ஒருவர் படுகாயமடைந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக புல்டோசர் உரிமையாளர் மற்றும் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர். கட்டட உரிமையாளர், என்ஜினியர், ஒப்பந்ததாரர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த விபத்து குறித்து, கட்டிட உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக மாநகராட்சி மேயர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த விபத்திற்கு காரணமான மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது வழக்கு பதிய கோரி சனிக்கிழமையன்று (ஜன.28) அண்ணாசாலையில் விபத்து நடந்த இடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, “மெட்ரோ ரயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் உள்ள கட்டிடத்தை இடிக்க மாநகராட்சி 13ந் தேதி அனுமதி வழங்கியது. விதிமுறைப்படி கட்டிடம் இடிக்கப்படுகிறதா? என உயர் அதிகாரிகள் ஆய்வு செய்யவில்லை. இந்த அலட்சியத்தால் ஏற்பட்ட விபத்தில் இளம்பெண் உயிரிழந்ததற்கு மாநகராட்சிதான் பொறுப்பு.
மாநகராட்சி வரி வசூலிக்கும் எந்திரமாக உள்ளது. சாலை வரி செலுத்தும் மக்களுக்கு பாதுகாப்பான சாலையை வழங்குவது மாநகராட்சி, அரசின் பொறுப்பு. வரியை கொடுத்துவிட்டு உயிரையும் விட வேண்டுமா? அண்ணா சாலையிலேயே இதுபோன்று நடைபெறுகிறது என்றால், பிறப் பகுதிகளில் எத்தனை எத்தனை மரணங்கள் நடந்திருக்கும். அரசு நிர்வாகத்தின் கையாலாகாததனம், அதிகார வர்க்கப் போக்கே இந்த விபத்திற்கு காரணம். எனவே, மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகள் மீது வழக்கு பதிய வேண்டும்.
ஆயிரம் விளக்கு, துறைமுகம், எழும்பூர், புரசைவாக்கம், ஜார்ஜ் டவுன், ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பழைய கட்டிடங்கள் உள்ளன. இத்தகைய கட்டிடங்கள் இடித்து புதுப்பிக்கும் பணியை மாநகராட்சி முறையாக ஆய்வு செய்ய வேண்டும். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்” என்றார்.
“ஒரு உயிரிழப்பிற்கு பிறகே, சம்பந்தப்பட்டவர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. விபத்து நடந்த இடத்தில் தகர சீட் அடித்துள்ளது சரியா. இதை முன்கூட்டியே அதிகாரிகள் செய்திருக்க வேண்டாமா? புளியந்தோப்பில் சாலை அமைக்கும் பணிக்காக இரவில் தடுப்பு அமைத்துள்ளனர். அதை அகற்றாமல் சென்றதால் ஆட்டோ ஓட்டுநர் மோதி விபத்துக்குள்ளாகி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளார். சாலை போன்ற அடிப்படை வசதிகளை கூட முறையாக செய்து கொடுக்காததால் உயிரிழப்புகள் நடக்கிறது. சிங்கார சென்னை, மாஸ்டர் பிளான் என்று பேசுவது ஒருபுறமிருக்கட்டும், முதலில் நடக்க நல்ல சாலையை உருவாக்கி தர வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த போராட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் வி.தனலட்சுமி, வே.ஆறுமுகம், ஆயிரம்விளக்கு பகுதிக்குழு உறுப்பினர்கள் எஸ்.பாலசுப்பிரமணியம், சிவா, வெங்கடேசன், ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.