கள்ளக்குறிச்சியில் உரிய அனுமதியின்றி தேர்தல் பிரச்சாரம் செய்ததாகக் கூறி உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி நடைபெறுகிறது. அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் களை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் செய்து வருகிறார். கடந்த 23- ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் கள்ளக் குறிச்சி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கௌதம சிகாமணியை ஆதரித்து கள்ளக்குறிச்சி 4 முனை சந்திப்பில் பிரச்சாரம் செய்தார். அப்போது அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டதாம். இதன் அடிப்படையில், அனுமதியின்றி பிரச்சாரம் செய்ததாகவும், பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாகவும் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சங்கராபுரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. உதயசூரியன் ஆகிய 2 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.