சிதம்பரம், ஜூன் 8-ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இருசக்கர வாகன பிரச்சாரத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததால் தடையை மீறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர்.கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கிள்ளையில் ஹைட்ரோகார்பன் என்ற அபாய திட்டம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாவட்டச் செயலாளர் டி. ஆறுமுகம் தலைமையில் இரு சக்கர வாகன பிரச்சாரம் நடத்தத் திட்டமிட்டது. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் இதனைத் துவக்கி வைத்துப்பேசினார். அவர் பேசிமுடித்தவுடன் பிரச்சாரம் செய்ய கிள்ளை - பரங்கிப்பேட்டை சாலையில் புறப்பட்ட அனைவரையும் காவல்துறையினர் தடுத்தனர். இதனால் அனைவரும் அந்த சாலையிலேயே அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து தொடர்ந்து பிரச்சாரம் செய்ய அனுமதி இல்லை என்று கூறி அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் ரமேஷ்பாபு, திமுகவின் மாநில பொதுக்குழு உறுப்பினர் கிள்ளை ரவீந்திரன், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர்கள் கற்பனைச்செல்வம், ஜெயசீலன் உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டனர்.இதனைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் தமிழகத்தில் பாசன நீர் வற்றிப் போய் விவசாயிகள் விவசாயம் செய்யமுடியாத சூழல் உள்ளது. அதே போல் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அலைகிறார்கள். இந்த நேரத்தில் விவசாயம், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது. இந்த திட்டத்தைத் தமிழகத்தில் தடைசெய்யத் தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்றார். தமிழக அரசின் காவல்துறை வேதாந்த நிறுவனத்தின் ஒரு நிறுவனமாகச் செயல்படுகிறது. தடைகள் பல விதித்தாலும் வாழ்வாதார பிரச்சனைகளுக்கு அனைவரும் ஒருங்கிணைந்து போராடவேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.