கடலூர், மே 23- பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதைக் கண்டித்தும், வேலை நேரத்தை12 மணி நேரமாக அதிகரிப்பதைக் கண்டித்தும் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் கடலூர் மாவட்டத்தில் 300 மையங்களில் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் சிஐடியு மாவட்டத் தலைவர் டி.பழனிவேல் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியூ மாவட்டச் செயலாளர் பி.கருப்பையன், ஏஐடியூசி மாவட்டச் செயலாளர் வி.குளோப், சிஐடியு நிர்வாகிகள் வி.கிருஷ்ணமூர்த்தி, ஆர்.ஆளவந்தார், வி.திருமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போக்குவரத்து பணிமனை முன்பு தொமுச தலைவர் பழனிவேல் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் சிஐடியு மாநில துணை பொது செயலாளர் பாஸ்கரன், மணிமாறன் (எம்எல்எப்), கருணாநிதி (ஏஎல்எல்எப்), சாமிநாதன் (ஐஎன்டியுசி) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தில் உள்ள 11 போக்குவரத்து பணிமனை முன்பும் ஆர்பாட்டம் நடைபெற்றது. நெய்வேலியில் சிஐடியு, தொமுச உள்ளிட்ட சங்கங்கள் சார்பில் ஆலை வாயில்களில் ஆர்பாட்டங்கள் நடைபெற்றன. சுரங்கம் 1இல் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் கலந்து கொண்டார். நெய்வேலி சங்கத்தின் தலைவர் ஏ.வேல்முருகன், பொதுச்செயலாளர் டி.ஜெயராமன், பொருளாளர் சீனுவாசன் உள்ளிட்டோர் பல்வேறு இடங்களில் ஆர்பாட்டங்களில் பங்கேற்றனர். மாவட்டத்தில் கடலூர், நெய்வேலி, பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம், வடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்பாட்டம் நடைபெற்றது.