இராமநாதபுரம், மார்ச் 28- கொரானோ வைரஸ் காரணமாக கர்நாடகம் மாநிலம் மங்களூரில் மீன்பிடி தொழில் முழுமையாக நிறுத்தம் செய்யப் பட்டுள்ளது. அங்கு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுவந்த இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 39 பேர் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் பார்த்திபனூரில் இறக்கிவிடப்பட்டுள்ளனர். மருத்துவப் பரிசோதனை முடிந்து மூன்று நாட்களாக திருமண மண்டபம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதேபோல் சத்தியமங்கலம் தமிழக எல்லையில் வேன், கார் மற்றும் பேருந்துகளில் வந்த 650-க்கும் அதிகமான இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் அங்கேயே காத்திருக்கின்றனர். மருத்துவப் பரிசோதனைக்குப்பின் அவர்களை இராமநாதபுரம் மாவட்டத்தில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடல் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.கருணாமூர்த்தி மாவட்ட நிர்வாகத்தையும், தமிழக அரசையும் கேட்டுக்கொண்டுள்ளார்.