tamilnadu

img

பாஜகவில் சேர எந்த திட்டமும் இல்லை...  சச்சின் பைலட் அறிவிப்பு 

ஜெய்ப்பூர்
ராஜஸ்தான் மாநிலத்தின் துணை முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவருமான சச்சின் பைலட் முதல்வர் பதவி மற்றும் உட்கட்சி பிரச்சனையை காரணம் காட்டி ஆட்சிக்கும், கட்சிக்கும் அதிருப்தி அளிக்கும் வகையில் செயல்பட்டார். இதன் காரணமாக ராஜஸ்தான் அமைச்சரவையில் இருந்தும், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியிலிருந்தும் சச்சின் பைலட் நேற்று (செவ்வாய்) நீக்கப்பட்டார்.  

இவருடன் விஸ்வேந்திர சிங், ரமேஷ் மீனா ஆகிய 2 அமைச்சர்களும் நீக்கப்பட்டனர். சச்சின் பைலட் மற்றும் 2 அமைச்சர்கள் நீக்கம் தொடர்பான அறிக்கையை முதல்வர் அசோக் கெலாட் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவிடம்  பரிந்துரைக்க அவர் அதனை ஏற்றுக் கொண்டார். புதிய காங்கிரஸ் கமிட்டி தலைவராக மாநில கல்வித்துறை இணையமைச்சரான கோவிந்த் சிங்  நியமிக்கப்பட்டார்.

சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இந்த தகவலை காங்கிரஸ் தலைவர்கள் சிலர் உறுதிப்படுத்தும் வகையில் கூறிய நிலையில், சச்சின் பைலட் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். 
அதில்,"நான் பாஜகவில் சேரவில்லை. பாஜகவில் சேர எந்த திட்டத்தையும் தொடங்கவில்லை. நான் இன்னும் காங்கிரஸ் கட்சி உறுப்பினராகவே இருக்கிறேன் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். குறிப்பாக முதல்வர் அசோக் கெலாட் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை. அவர் தான் முன்னாள் பாஜக முதல்வர் வசுந்தரா ராஜே போன்று செயல்படுகிறார். மேலும் காங்கிரஸ் மேலிடத்தில் உள்ள தலைவர்களின் மனதில் நஞ்சை கலக்க வைப்பதற்காகவே என்னை பாஜகவுடன் இணைக்க முயற்சிக்கிறார்கள்" என அவர் கூறினார்.