ஜெய்ப்பூர்:
பிரிட்டிஷாருக்கு உளவாளியாக இருந்து, சுதந்திரப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்த ஆர்எஸ்எஸ் - பாஜக கூட்டத்திற்கு, காங்கிரஸ் மரபுகுறித்துப் பேசத் தகுதியில்லை என்று,ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்கடுமையாக சாடியுள்ளார்.இதுதொடர்பாக ஜெய்ப்பூரில் அவர் பேசியிருப்பதாவது:
காங்கிரஸ் பேரியக்கத்தின் பாரம் பரியம் என்பது பெருமைக்குரியது. ஒட்டுமொத்த தேசமும் காங்கிரசின் பாரம்பரியத்தையும், தியாகத்தையும் போற்றுகிறது. ஆனால், பாஜக-வின் சித்தாந்தத்தைச் சேர்ந்தவர்கள், நாட்டுவிடுதலைப் போராட்டத்தின் போது, பிரிட்டிஷாருக்கு உளவாளியாக செயல்பட்டவர்கள். அவர்கள் காங்கிரசை விமர்சிப்பது, வெட்கக் கேடானது.தற்போது நாட்டின் அரசியலமைப்பு ஆபத்தில் உள்ளது. ஜனநாயகம் கொல்லப்படுகிறது. அனைத்து அரசியல் சட்ட அமைப்புக்களும் பாழாகி வருகின்றன. நீதித்துறை, தேர்தல் ஆணையம், சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மீது அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. பிரதமரின்ஒப்புதல் இல்லாமல் நாட்டில் ஒரு நடவடிக்கை கூட எடுக்கப்படுவதில்லை. இன்று, பாஜக-வினர் ஒரு வகையான பாசிச மக்கள் ஜனநாயகத்தின் முகமூடியை அணிந்து ஆட்சிக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு அரசியலமைப்பில் நம்பிக்கை இல்லை. இதுஒரு சிறிய அச்சுறுத்தல் அல்ல. எங்களுக்கு முன்னாள் ஒரு பெரிய ஆபத்து. இவ்வாறு அசோக் கெலாட் பேசியுள்ளார்.