ஜெய்ப்பூர்:
மத்தியப்பிரதேசத்தைப் போல ராஜஸ்தான் மாநிலத்திலும் ஆளும்கட்சி எம்எல்ஏ-க்களை விலைக்குவாங்கி, ஆட்சியைக் கவிழ்க்கும்முயற்சியில் பாஜக இறங்கியிருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜஸ்தான் சட்டமன்றத்தின் தலைமை கொறடா மகேஷ் ஜோஷி,மாநில ஊழல் தடுப்பு அமைப்பின் தலைவருக்கு இதுதொடர்பாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், “மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் கர்நாடகாவைப் போலவே, ராஜஸ்தானிலும் எங்கள்எம்எல்ஏக்கள் மற்றும் எங்களுக்குஆதரவளிக்கும் சுயேச்சைகள்- ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை நிலையற்றதாக மாற்ற எதிர்கட்சிகளால் பேரம் பேசப்படுகிறார்கள். இது மக்களின் விருப்பத்திற்கு எதிரானதாக உள்ளது” என்று பாஜகவின் பெயரைக் குறிப்பிடாமல் மகேஷ் ஜோஷி குற்றம் சாட்டியுள்ளார்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக்கெலாட்டும் இதே குற்றச்சாட்டை வைத்துள்ளார். “ஒரு எம்.எல்.ஏ.வுக்கு 25 முதல் 30 கோடி வரை செலவழிக்க பாஜக தயாராக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன” என்று என்.டி.டிவி-க்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியுள்ளார்.ராஜஸ்தானில் மூன்று மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் 19 அன்றுதேர்தல் நடைபெற உள்ளது. ஒருவேட்பாளர் வெற்றிபெற 51 எம்எல்ஏ-க்கள் ஆதரவு தேவை என்ற வகையில், 107 எம்எல்ஏ-க்களைக் கொண்டகாங்கிரஸ் இரண்டு இடங்களிலும், 72 எம்எல்ஏ-க்களை கொண்டுள்ள பாஜக ஒரு இடத்திலும் வெற்றி பெறவாய்ப்புகள் இருந்தன. ஆனால், பாஜக ஒருவருக்குப் பதிலாக இரண்டு பேரை களம் இறக்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்து வரும் 12எம்எல்ஏக்களை தன்பக்கம் வளைக்க முயற்சித்து வருகிறது. ஆட்சியைக் கவிழ்க்கும் திட்டமும் இதற்குள் அடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.