சென்னை:
மும்பையை தலைமையிடமாகக் கொண்ட பிரபல நிதி நிறுவனம் 28,000 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் சிபிசிஐடி பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்தியா முழுவதும் கிளைகளை அமைத்து, மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் மேனேஜ்மென்ட் இந்தியா லிமிடெட். இந்த நிறுவனம் பல்வேறு நிதி திட்டங்களில் இந்தியா முழுவதும் 40 லட்சம் வாடிக்கையா ளர்களைக் கொண்டுள் ளது. பொதுமக்கள் கோடிக்கணக்கான ரூபாயை பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்துள்ளனர். தமிழ்நாட்டிலும் இந்நிறுவனத்திற்கு 14 க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன.இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் திடீரென இந்த நிதி நிறுவனம், 6 நிதி திட்டங்களில் இழப்பு ஏற்பட்டதாகக் கூறி நிறுத்தியுள்ளது. இந்த ஆறு திட்டங்களில் மட்டும் இந்தியா முழுவதும் சுமார் 3 லட்சம் முதலீட்டாளர்களும், தமிழ்நாட்டில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களும் உள்ளனர். சுமார் 28 ஆயிரம் கோடி ரூபாய் இந்த திட்டங்களின் கீழ் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து முதலீட்டாளர்கள் நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஃப்ராங்க்ளின் நிதி நிறுவனம் மீது புகாரளித்தனர்.மாநில உயர் நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டன. அதேபோல், சென்னை உயர் நீதிமன்றத்திலும் இது தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்க ளுக்காக சென்னை ஃபைனான்ஷியல் மார்க்கெட் அண்ட் அக்கவுண்டபிலிடி என்ற நிறுவனத்தின் மூலம் முதலீட்டாளர்கள் சிபிசிஐடி காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையிலும், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும், சிபிசிஐடி பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர், ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் அசஸ்மண்ட் மேனேஜ்மண்ட் நிறுவனத்தின் மீது 28 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சந்தோஷ் தாஸ் காமத், தலைமை முதலீட்டு அதிகாரி சஞ்சய், இயக்குநர்கள் ஜெயராம் சுப்பிரமணியம், விவேக் குட்வா, ஆர்.வி. சுப்பிரமணியம், பிரதீப் சா உள்ளிட்ட நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.