புதுதில்லி:
பிஸ்கெட் தொழிலில், 90 ஆண்டுகள் வரை கொடிகட்டிப் பறந்த ‘பார்லே’ பிஸ்கெட் நிறுவனம், இன்று மோசமான நலிவைச் சந்தித்து இருப்பதாகவும், தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 10 ஆயிரம் ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பப் போவதாகவும் அறிவித்துள்ளது.1929ஆம் ஆண்டு மும்பையில் சௌகான் குடும்பத்தாரால் தொடங்கப்பட்டது ‘பார்லே’ நிறுவனம் 1939 முதல் பிஸ்கட் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்தியா சுதந்திரமடைந்த பின், பிரிட்டிஷ் நிறுவனங்களுக்கு மாற்றாக குளுக்கோஸ் பிஸ்கட்டுகளை ‘பார்லே’ பிரபலப்படுத்தியது.
தற்போது 1000 கோடி ரூபாய் விற்பனையுடன் ‘பார்லே’ நிறுவனம் “பார்லே-ஜி’, ‘மொனாகோ’, ‘மேரி’ பிராண்ட்பிஸ்கெட்ஸ் தயாரிப்புகளை வைத்துள்ளது. பாதிக்கும் அதிகமான ‘பார்லே’நிறுவன தயாரிப்புகள் கிராமப்புறச் சந்தைகளில்தான் விற்பனையாகிறது.இதன்மூலம், கடந்த 90 ஆண்டுகளில் மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்த ‘பார்லே’ நிறுவனத்திற்கு, நாடு முழுவதும் 10 இடங்களில் சொந்தமாக, பிஸ்கெட் தயாரிப்பு தொழிற்சாலைகளும், 125 காண்ட்ராக்ட் தொழிற்சாலைகளும் இருக்கின்றன. இங்கு மொத்தமாக 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர்.இந்நிலையில்தான், மோடி அரசு கொண்டுவந்த ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையால், தாங்கள் இவ்வளவு காலத்தில் சந்திக்காத கடும் இழப்பை சந்தித்து வருவதாக ‘பார்லே’ நிறுவனம் பகிரங்கமாக கூறியுள்ளது.
“பிஸ்கெட் உணவுப் பொருட்களுக்கான வரி முன்பு 12 சதவிகிதமாக இருந்தது. ஜிஎஸ்டி அறிமுகத்தின்போது, அதிக விலையுள்ள பிஸ்கட்டுகளுக்கு 12 சதவிகித ஜிஎஸ்டி-யும், குறைந்த விலையுள்ள பிஸ்கட்டுகளுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டியும் நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மத்திய அரசு அனைத்து வகை பிஸ்கட்டுகளுக்கும் 18 சதவிகித ஜிஎஸ்டி-யை நிர்ணயித்தது. இதனால் பிஸ்கெட் நிறுவனங்கள் விலையை உயர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. ‘பார்லே’ நிறுவனமும் 5 சதவிகிதம் விலையை உயர்த்தியது. அது தற்போது விற்பனைக் குறைவுக்கு காரணமாக அமைந்து, நிறுவனத்தைக் கடுமையாக பாதித்துள்ளது” என்று ‘பார்லே’ தயாரிப்புகளின் தலைவர் மயங்க் ஷா தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, “கடந்த இரண்டு காலாண்டுகளில் நுகர்வோர்களின் வாங்கும் சக்தி மிகவும் குறைந்துள்ளது; சில்லரை வணிகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.“ஒரு கிலோ 100 ரூபாய் அல்லது அதற்கும் குறைவான பேக்குகளின் ஜிஎஸ்டி-யை மட்டுமாவது, குறைக்கச் சொல்லி கேட்டோம்; ஏனெனில் அவை 5 சதவிகிதம் அல்லது அதற்கும் குறைவாக விற்கப்படும் பிஸ்கட்டுகள் ஆகும். ஆனால், அதைச் செய்வதற்கும் கூட மத்திய அரசு மறுத்து விட்டது” என்று குற்றம் சாட்டியிருக்கும் மயங்க் ஷா, “இதன் காரணமாக, 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ஊழியர்களை உடனடியாக பணிநீக்கம் செய்வதைத் தவிர, தங்களுக்கு வேறு வழியில்லை”என்றும் மயங்க் ஷா குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் மற்றொரு முன்னணி பிஸ்கெட் தயாரிப்பு நிறுவனமான பிரிட்டானியாவின் நிர்வாக இயக்குநர் வருண் பெர்ரி-யும் சில நாட்களுக்கு முன்பு, ஜிஎஸ்டி-யால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து தனது கவலையை வெளிப்படுத்தி இருந்தார். “மக்கள் 5 ரூபாய் பிஸ்கெட் பாக்கெட் வாங்குவதற்குக் கூட வாங்க தயக்கம் காட்டுகின்றனர்” என்றும் “இது பொருளாதாரத்தில் மிக மோசமான பிரச்சனை” என்றும் ‘எக்னாமிக் டைம்ஸ்’ ஊடகத்துக்கு பேட்டி அளித்திருந்தார்.சந்தை ஆய்வாளர் நீல்சனும், கடந்த மாதம் விரைவாக விற்பனையாகும் சரக்குகள் துறையின் வளர்ச்சியைக் கணக்கிட்டு இருந்தார். அப்போது, இந்த சரக்குகள் துறையானது, 2018ஆம் ஆண்டு 11 முதல் 12 சதவிகித வளர்ச்சியைக் கண்டிருந்த நிலையில், 2019-ஆம்ஆண்டில் 9 முதல் 10 சதவிகிதமே வளர்ச்சி கண்டுள்ளது என்று கூறியிருந்தார். மேலும் இந்த விற்பனைக் குறைவானது, உணவு மற்றும் உணவு சாராத பிரிவுகளிலும் ஏற்பட்டுள்ளது. அதாவது உப்பு சேர்க்கப்பட்ட தின்பண்டங்கள், பிஸ்கெட்டுகள், கார உணவுகள், சோப்புகள், டீ பாக்கெட்டுகள் ஆகியவற்றின் விற்பனை குறைந்துள்ளது என்று தெரிவித்திருந்தார். தற்போதைய பிரிட்டானியா, பார்லே பிஸ்கெட் நிறுவனங்களின் கூற்றுகளும் அதை மெய்ப்பித்துள்ளன.