tamilnadu

img

உணவு பொருட்களின் விலை உயர்வால், ஏப்ரல் மாதத்தின் பணவீக்கம் அதிகரித்துள்ளது - ராய்ட்டர்ஸ் நிறுவனம் தகவல்

உணவுப் பொருட்களின் விலை உயர்வால், கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிகமாக ஏப்ரல் மாதத்தில் பணவீக்க விகிதம் அதிகரித்துள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. 

கடந்த 3-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை, ராய்ட்டர்ஸ் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் சில்லறைப் பணவீக்க விகிதம் சுமார் 2.97 சதவிகிதமாக உயரக்கூடும் என்று தெரியவந்துள்ளது. இது கடந்த மார்ச் மாதத்தை விட 0.11 சதவிகிதம் கூடுதலாகும். மார்ச் மாதத்தில் சில்லறைப் பணவீக்க விகிதம் 2.86 சதவிகிதமாக இருந்தது.

முந்தைய மாதத்தின் உணவு பொருட்களின் விலை உயர்வு, ஏப்ரல் மாதத்திலும் தொடரும் என்று நாங்கள் கணித்திருந்தோம். அதற்கேற்பவே தற்போது சில்லறைப் பணவீக்க விகிதமும் முன்னர் கணித்த அளவைக் காட்டிலும் அதிகரித்துள்ளது என்று சிட்டி (Citi) ஆய்வு நிறுவன பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததாலும், லோக்சபா தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருப்பதாலும், பணவீக்க விகிதம் ஏப்ரல் மாதத்தில் சற்று அதிகரிக்க காரணமாக இருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தைத் தொடர்ந்து பணவீக்க விகிதம் அதிகரித்து வந்த போதிலும், மக்களவை தேர்தல் முடிந்து புதிய ஆட்சி அமைத்த பின்னரே இது பற்றிய ஒரு ஸ்திரமான முடிவெடுக்க முடியும். இருப்பினும், இது சவாலானதாகவே இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான ஓபெக் (Organization of Petroleum Exporting Countries-OPEC) ஏற்றுமதியை குறைந்ததாலும், அமெரிக்காவின் ஈரான் மற்றும் வெனிசுலா நாடுகளின் மீது கட்டுப்பாடு விதித்ததால், உள்நாட்டில் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்தது. இதன் காரணமாக கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது.

இந்த பெட்ரோல் விலை உயர்வின் காரணமாக உணவுப் பொருட்களின் போக்குவரத்துச் செலவும் கூடியது. இதனாலும் பணவீக்கம் அதிகரிக்க காரணமாகும் என்று ஐஎன்ஜி (ING) நிறுவனத்தின் ஆசிய பொருளாதார நிபுணர் பிரகாஷ் சக்பால் தெரிவித்துள்ளார். 

மேலும், நடப்பு ஆண்டின் இரண்டாம் பருவத்தில் பணவீக்க விகிதம் உயர ஆரம்பிக்கும், அப்போது ரிசர்வ் வங்கி பணவீக்க விகிதத்தை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க முயற்சிக்கக் கூடும் என்று மிஸூகோ நிறுவனத்தின் பொருளாதார நிபுணர் விஷ்ணு வர்த்தன் தெரிவித்துள்ளார்.