மோடி அரசின் தவறான நடவடிக்கைகளால் பொருளாதார மந்த நிலை ஏற்பட வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் 5 ரூபாய் பிஸ்கெட் தொடங்கி ஆட்டோ மொபைல் துறை வரை பல தொழில்கள் முற்றிலும் முடங்கி உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் வேலை இழக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கி உள்ளது.
நாடுமுழுவதும் 27 பொதுத்துறை வங்கிகள் இருந்த நிலையில் பல வங்கிகளை இணைத்து இனிமேல் 12 வங்கிகளாக செயல்படும் என அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். இதுமட்டுமின்றி பொதுத்துறை வங்கிகளுக்காக பல்வேறு சீர்திருத்தம் என்ற பெயரில் பல அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த நிதியாண்டில் 18 பொதுத்துறை வங்கிகளில் 14 வங்கிகள் லாபம் ஈட்டியுள்ளன.
பாங்க் ஆப் பரோடா, விஜயா பாங்க், தேனா பாங்க் ஆகியவை இணைக்கப்படும்.
பஞ்சாப் நேஷனல் வங்கியுடன், ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் வங்கி ஆகியவை இணைக்கப்படும்.
கனரா வங்கியும், சிண்டிகேட் வங்கியும் இணைக்கப்படும்.
யூனியன் வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி ஆகியவை இணைக்கப்படும்.
இந்தியன் வங்கியும், அலகாபாத் வங்கியும் இணைக்கப்படும்.
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் இந்தியா ஆகியவை தனி வங்கிகளாக செயல்படும்
இந்தியன் ஓவர்சிஸ் வங்கி, யூகோ பாங்க், பாங்க் ஆப் மகாராஷ்டிரா, பஞ்சாப் அண்ட் சிந்த் பாங் ஆகியவை அந்தந்த பகுதிகளில் தொடர்ந்து பணியாற்றும்.
இவ்வாறு அவர் கூறினார்
பொருளாதாரவளர்ச்சி கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்துள்ளது. கடந்த ஏப்ரல் ஜூன் வரையிலான பொருளாதார வளர்ச்சி 5 சதவிகிதம் ஆக குறைந்துள்ளது.