இந்தியா பொருட்களின் ஏற்றுமதி, தொடர்ந்து 4 மாதங்களாகச் சரிவடைந்து வருகிறது. இதன் எதிரொலியாக, கடந்த நவம்பர் மாதத்தின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி இடையிலான வர்த்தகப் பற்றாக்குறை 17.58 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
கடந்த நவம்பர் மாதத்தில், இந்தியா பொருட்களின் ஏற்றுமதி 0.32 சதவீதம் சரிந்துள்ளது. அதேபோல், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இறக்குமதி 12.71 சதவீதம் சரிவு கண்டுள்ளது. இந்த நிலையில், வர்த்தகப் பற்றாக்குறை 17.58 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதுவே கடந்த 2018-2019 நிதியாண்டில், வர்த்தக பற்றாக்குறை 12.12 பில்லியன் டாலராக மட்டுமே இருந்தது. இதன் பாதிப்பு வர்த்தகச் சந்தையில் மட்டும் அல்லாமல் ரூபாய் மதிப்பிலும் எதிரொலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த நவம்பர் மாதத்தில் ஆடைகள் ஏற்றுமதி தொடர்ந்து 4 மாதங்களாகச் சரிந்து 25.98 பில்லியன் டாலராகச் சரிந்துள்ளது. இதேபோல் இறக்குமதியின் அளவும் 38.11 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. இந்தியாவில் இருந்து அதிகமாக ஏற்றுமதி செய்யும் 30 பொருட்களில் 17 பொருட்களின் வர்த்தகம் சரிந்துள்ளது. இதேபோல் அதிகளவில் இறக்குமதி செய்யப்படும் 30 பொருட்களில் 21 பொருட்களின் வர்த்தகம் குறைந்துள்ளது. அதிலும் முக்கியமாக இந்தியாவில் இருந்து அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும் முந்திரியின் ஏற்றுமதி 33.9 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. எண்ணெய் உணவுகளின் ஏற்றுமதியும் 54.59 சதவீதம் சரிந்துள்ளது. அதேபோல், இதே காலகட்டத்தில் எலக்ட்ரானிக் பொருட்களின் இறக்குமதி அளவு 46.13 சதவீதமும், மருந்து பொருட்கள் 20.60 சதவீதமும், இன்ஜினியரிங் பொருட்கள் 6.32 சதவீதமும், கடல் சார்ந்த பொருட்கள் 9 சதவீதமும் அதிகரித்துள்ளது. மேலும் இறக்குமதியில் நிலக்கரி, பெட்ரோலியம், கெமிக்கல், தாது பொருட்கள், ஆகியவற்றின் அளவு 23.6 சதவீதத்தில் இருந்து 12 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
இதற்கு உள்நாட்டு வர்த்தகச் சூழ்நிலை மற்றும் சர்வதேச வர்த்தகச் சந்தையில் நிலவும் பிரச்சனையே முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வர்த்தகச் சந்தையில் உள்ள பாதிப்பின் காரணமாக இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து நிலையற்ற தன்மையில் உள்ளது. இதுவும் வர்த்தகர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.