கலீலியோ எனும் இத்தாலிய மேதைதான் அறிவியலின் மறுமலர்ச்சிக்குக் காரணம். கலீலியோவின் ஆய்வுக்கு அவர் உருவாக்கிய தொலைநோக்கி பெரும் உதவிகரமாக இருந்தது. 1610-ஆம் ஆண்டு ஜனவரியில் இவர் கண்டுபிடித்த தொலைநோக்கிகள் மூலம் இவர் வியாழனின் துணைக்கோள்களைக் கண்டறிந்தார். அவை வியாழனை மையம் கொண்டு நகர்கிறது என்று அவர் கண்டுபிடித்தார். இவர் கண்டுபிடித்த திசைகாட்டியும் ஆய்வுகளுக்குப் பெரிதும் உதவிகரமாக இருந்தது.மேலும் பல வானியல் நிகழ்வுகளைத் தொலைநோக்கி மூலம் கண்டறிந்து உறுதிப்படுத்தினார். 1610-ஆம் ஆண்டு வெள்ளி, நிலவு போல் பல்வேறு விதமான பரிமாணங்களில் தோன்றுவதையும் மறைவதையும் கண்டார். சனிக் கோளை சுற்றியுள்ள வளையத்தைக் கண்டறிந்தார், ஆனால், அவர் அதை வேறொரு கிரகமாகத் தவறாகக் கணித்துக்கொண்டார், பின்னர் அது சனிக் கோளை சுற்றியுள்ள வளையம் என்று கண்டறிந்தார். பின்னர் நெப்டியூன் கோளைக் கண்டறிந்தார், ஆனால், அதை அவர் நட்சத்திரம் என எண்ணினார். சூரியனின் கரும்புள்ளிகளை ஆய்வு செய்தார்.
இவர் சாய்ந்த கோபுரத்தின் மேல் நின்று வெவ்வேறு நிறைகளையுடைய பொருள்களைக் கீழே விழச்செய்து, பொருள்கள் கீழே விழும் நேரத்திற்கும், அதன் நிறைக்கும் தொடர்பில்லை என்று நிரூபித்தார்.கலீலியோ கண்டுபிடித்த தொலைநோக்கிகள் மூலம் பல குழப்பங்களை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தார். சூரியமையக்கோட்பாட்டை ஆதரித்ததால், அது கிறித்துவ மதத்துக்கு எதிரானது எனவும், மதநம்பிக்கைக்கு எதிராகச் செயல்பட்ட குற்றம் எனவும் கூறி கத்தோலிக்க திருச்சபையால் அவர் 1633-ஆம் ஆண்டு முதல் சாகும் வரை வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டார். சிறைவைக்கப்பட்ட கடைசி ஒன்பதாண்டுக் காலத்தில்தான் ஆரம்ப காலத்தில் மேற்கொண்ட பொருள்களின் இயக்கம் குறித்த சோதனைகளை எழுதி வைத்தார். அவரின் குறிப்புகள் அறிவியலின் மறுமலர்ச்சிக்குப் பெரிதும் துணையாக இருந்தன.