கராச்சி,
பாகிஸ்தானில் பேருந்தில் பயணம் செய்த 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது பலோசிஸ்தான் மாகாணம். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் உடன் எல்லை பகுதியில் உள்ள இந்த மாகாணத்தில் பழங்குடியின மக்களுக்கும், பிரிவினைவாத மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கு இடையே அவ்வப்போது மோதல் நிகழ்வதால் அங்கு எப்போதும் பதற்றம் நிறைந்து காணப்படுகிறது
இந்த நிலையில், கராச்சியில் இருந்து கவ்டாருக்கு பேருந்தில் பயணிகள் சென்று கொண்டிருந்தனர். அந்த பேருந்துகளை மடக்கிய துப்பாக்கிய ஏந்திய நபர்கள், ஒவ்வொருவரையும் வரிசையாக சோதனையிட்டனர். அவர்களிடம் இருந்து அடையாள அட்டையை பரிசோதித்தவர்கள், பேருந்தில் இருந்து 16 பேரை கீழே இறக்கினர். அவர்கள் மீது 15 முதல் 20 பேர் கொண்ட துப்பாக்கிய ஏந்திய நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். 16 பேரில் இரண்டு பேர் மட்டும் தப்பி ஓடினர். மீதமுள்ளோர் கொல்லப்பட்டனர்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, லெவீஸ் பகுதி அதிகாரிகள் மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம், குவட்டாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 21 பேர் பலியாகினர். 60 பேர் காயம் அடைந்தனர்.