உலகை அறிவோம்
நீண்டகால பொருளாதார சமமின்மையைக் கண்டித்து தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் நடந்து கொண்டிருக்கும் மாபெரும் போராட்டத்தில் பங்கேற்றிருக்கும் மக்கள் திரளில் சிலரின் கருத்துக்கள்:
என் பாட்டி அவள் காலத்தில் ஒரு சர்வாதிகாரியை எதிர்த்து போராடினாள். என் அம்மாவும் ஒரு சர்வாதிகாரியை எதிர்த்து போராடினாள். நான் ஆறுவயது குழந்தைக்கு தாயாக இருக்கிறேன். இது நான் போராடுவதற்கான நேரம். என் மகள் இருபது வயதில் மகிழ்ச்சியாக இருப்பாள் என்று நம்புகிறேன். எனக்கு பயமில்லை, இழப்பதற்கும் என்னிடம் எதுவுமில்லை. ஆறுவயது நிரம்பியிருக்கும் என் பேத்திக்காக இந்தப் போராட்டத்தில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். சர்வாதிகாரம் எங்களைப் பிரித்து வைத்திருந்தது. ஆனால் பாருங்களேன் பெண்கள், குழந்தைகள், பாலின வேறுபாடுள்ளவர்கள், அகதிகள் என எல்லோரும் போராட்டக்களத்தில் கூடியிருக்கிறோம். யாருமே விடுபடவில்லை.
சர்வாதிகாரத்தின் கீழ் வாழ்க்கையை தொலைத்த தலைமுறைகள் நாங்கள். எங்களிடம் இளமை இல்லை. எங்கள் நண்பர்களை இழந்துவிட்டோம், ஏராளமான மக்கள் படுகொலை செய்யப்பட்டதை பார்த்திருக்கிறோம். பயந்துடனே வாழ்ந்து வந்தோம். இதோ இந்த இளைஞர்கள் புதிதாய் மலர்ந்திருக்கிறார்கள். அவர்களிடம் பயமே இல்லை. பார்க்கவே சந்தோசமாக இருக்கிறது. இந்தப் போராட்டம் இப்பொழுது உயர்த்தப்பட்ட முப்பது பெசோக்களுக்காக அல்ல, ஏற்கனவே நாங்கள் இழந்திருக்கும் முப்பது வருடங்களுக்காக. நாம் இந்த நாட்டை சிறந்ததாக்க வேண்டும், ஏனென்றால் அது நமது கையில்தான் உள்ளது. நாங்கள் போரில் இல்லை, அதேநேரத்தில் நாங்கள் பயப்படவும் இல்லை. என்னை மன்னித்துவிடு அம்மா, எனக்கு எதிர்காலம் முக்கியம். நம்பமுடியாத அளவிற்கு எங்களை முட்டாள்கள் என்று நினைக்கிறார்கள் அவர்கள். இதோ மக்கள் எழுந்து ஒன்றுகூடி நாங்கள் முட்டாள்கள் இல்லை என்று அரசாங்கத்தின் காதுகளில் கர்ஜிக்கிறார்கள். எண்ணற்ற மக்கள் காயம்பட்டிருக்கிறார்கள். எண்ணற்ற மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும் காவல்துறையைப் பார்த்து எனக்குப் பயமில்லை. உண்மையில் எனக்குப் புரியவில்லை எதற்காக இவ்வளவு பெரிய படைகளை வைத்து எங்களைத் தாக்குகிறார்கள் என்று. நான் போரிடுவதே குறைந்த செலவில் நல்ல கல்விக்காகத்தான், வேறொன்றுமில்லை. போராட்டத்திற்கு நடுவே எத்தனையோ மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். எத்தனையோ பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார்கள், ஆண்களும் கூட. அமைதியாகப் போராடிக் கொண்டிருக்கும் எத்தனையோ மக்கள் பார்வையை இழந்திருக்கிறார்கள். இந்த அரசாங்கம் மற்ற நாடுகளுக்கு தாமிரத்தையும் லித்தியத்தையும் நீரையும் ஏன் கடலையும் கூட விற்பனை செய்வதற்கு ஒப்பந்தங்கள் போட்டு விற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால் அந்தப் பணம் அடித்தட்டு மக்களை ஒருபோதும் வந்துசேரவில்லை. எங்கள் போராட்டம் இந்த பொருளாதாரச் சமமின்மையை போக்குவதற்காக மட்டும்தான். நீங்கள் தொடர்ந்து ஏழைகளை பட்டினி போட்டீர்கள் என்றால், பணக்காரர்களின் அமைதி குலையத்தான் செய்யும்.