tamilnadu

மோடி, அமித் ஷா மீது தேர்தல் விதிமீறல் வழக்கு

புதுதில்லி, ஏப்.30-தேர்தல் நடத்தை விதிகளை மீறிய பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் சார்பில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பி யுள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகும் மே 23 ஆம் தேதி வரை நடத்தை விதிகள் அமலில் இருக்கும்.இந்த நிலையில், பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளதாகவும் அது தொடர்பாக புகார் அளித்தும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுஷ்மிதா தேவ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, இதுகுறித்து செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தியது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மே 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.  தேர்தல் ஆணையம் மே 2 அன்று விரிவான பதில் அறிக்கையை தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக, சுஷ்மிதா தேவ் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ராணுவப் படைகள் தொடர்பான பேச்சு குறித்து பிரதமர் மற்றும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் 8 புகார்கள் தேர்தல் ஆணை யத்திடம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்காதது ஏன்? தேர்தல் ஆணையம் எங்களது புகார்களை நிராகரிக்கலாம். ஆனால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருப்பது சட்டத்துக்கு எதிரானது என்றார். தேர்தல் ஆணையம் மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக செயல்படுவ தாகவும் பாஜக தலைவர்களின் நடத்தை விதிமீறல்களை கண்டு கொள்ளவில்லை என்றும் பல்வேறு எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகின்றன.