tamilnadu

img

கண்ணோட்டம் - விபரீதத்திற்கு வெற்றிலை பாக்கு வைத்து விருந்துக்கு அழைப்பதா?

கொரோனா நோய்த் தொற்று பரவிய பிறகு பல்வேறு கட்டுப்பாடுகள், கெடுபிடிகள் விதிக்கப்பட்டன. காய்கறி, மளிகைப் பொருட்கள், பழங்கள் விற்பதற்கும்-வாங்குவதற்கும் பல்வேறு நிபந்தனைகள், நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஆனால், டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறப்பதற்கு செய்யப்பட்ட ஏற்பாடுகளோடு ஒப்பிடும் போது இவையெல்லாம் ஒன்றும் இல்லை என்று சொல்லக் கூடிய அளவிற்கு வியாழனன்று மீண்டும் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் டாஸ்மாக் விற்பனை கோலாகலமாக துவங்கியுள்ளது.

கடை திறப்பு குறித்து அறிவிக்கப்பட்டவுடன், ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. திருப்பூர் மாவட்டத்தில் குடையோடு வந்தால்தான் சரக்கு விற்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் நிபந்தனை விதித்தார். முதல் நாளே குடைக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. பலர் வீடுகளில் இருந்த குடைகளை தேடிப் பிடித்து எடுத்தார்கள். குடை இல்லாதவர்கள் கள்ளச் சந்தையில் கூட குடையை வாங்கியிருக்கிறார்கள். 

சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பிற மாவட்டங்களுக்குச் சென்றால் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்று அண்டை மாவட்ட ஆட்சியர்கள் எச்சரித்தனர். அண்டை மாநிலங்களில் கடை திறக்கப்பட்டவுடன், தமிழகத்தில் இருந்து சிலர் படையெடுத்த நிலையில், அண்டை மாவட்டத்துக்கு செல்வது ஒரு பெரிய பொருட்டா என்று எதிர் சவால் விட்டார்கள். இன்னொரு மாவட்ட கலெக்டர் பொது இடத்தில் யாராவது மது குடித்தால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்து பிடுங்கும்; ஒல்லியாக இருந்தாலும் குண்டர் சட்டம் விடாது என்று அச்சுறுத்தல் விடப்பட்டது.டாஸ்மாக் கடை 10 மணி முதல் 5 மணி வரைதான் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்ட நிலையில், யார் யார் எந்த நேரத்தில் மது வாங்க வரவேண்டும் என்று தமிழக அரசு கம்பீரமாக அறிவித்தது. 50 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிகாரர்கள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், 40 வயதிலிருந்து 50 வயதிற்குட்பட்டவர்கள் மதியம் 1 மணி முதல் 3 மணி வரையிலும், 40 வயதிற்குட்பட்ட இளைய குடிகாரர்கள் மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரையிலேயே சரக்கு வாங்கி திளைக்கலாம் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. 

சீனியர் சிட்டிசன் எனப்படும் மூத்த குடிமக்களுக்கு இப்போதுதான் முதல் மரியாதை வழங்கப்பட்டிருக்கிறது. மறுபுறத்தில், அக்னி நட்சத்திரம் உச்சத்தில் இருப்பதால், வீட்டை, விட்டு யாரும் வெளியே வரவேண்டாம் என்று வானிலை இலாகா எச்சரிக்கிறது. அநேகமாக ‘மதுப் பிரியர்கள் நீங்கலாக’ என்ற திருத்தம் வெளியிடப்படலாம்.தங்களது வயதை நிரூபிப்பதற்கு ஆதார் அட்டை, ரேசன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களோடு வர வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆதார் அட்டை எதற்கு என்று இனிமேல் யாரும் கேட்க முடியாது. ஆதார் சாதாரண மனிதனின் அதிகாரம் என்ற வார்த்தைகள் எந்த அளவுக்கு அர்த்தமுள்ளவை என்று இன்றுதான் நிரூபிக்கப்பட்டுள்ளது. 

இப்போதுள்ள கொடூரமான காலத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்ட வழக்குகள் நிற்கவில்லை. ஆன்-லைனில் விற்பனை சாத்தியமா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. குடிமக்களை அலைய விடாமல் வீடுகளுக்கே சென்று விநியோகிக்க முடியுமா என்றும் கரிசனத்தோடு கேட்கப்பட்டது. இவையெல்லாம் சாத்தியமில்லை என்று அரசு கூறிய நிலையில், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். மூன்று நாளைக்கு ஒருமுறை மட்டுமே ஒருவருக்கு மதுபானம் விற்க வேண்டும். வாங்குபவரின் திருநாமம், முகவரி மற்றும் ஆதார் எண்ணுடன் ரசீது வழங்கப்பட வேண்டும் என்று கண்டிப்பு காட்டிய நீதித்துறை கடையை திறப்பது அரசின் கொள்கை முடிவு என்பதால் அந்த உயரிய கொள்கையில் தலையிட விரும்பவில்லை என ஒதுங்கிக் கொண்டது. நீதிமன்றம் தடைவிதிக்கும் என்ற கடைசி நம்பிக்கையும் தகர்ந்தது. 

முதல் நாளே பல கடைகள் களைகட்டத் துவங்கின. கடைகளுக்கு முன்னால் வாழை மரம் கட்டுவது, தோரணம் கட்டுவது என துவங்கி, சவுக்கு கட்டைகள் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கட்டப்பட்டு, இடையிடையே குறுக்கு கட்டைகளும் அமைக்கப்பட்டன. இனி வீடுகளுக்கு வெள்ளையடிக்க சுண்ணாம்பு தட்டுப்பாடு ஏற்படுமோ என ஐயுறும் வகையில் நெருப்பு வளையங்கள் போல சுண்ணாம்பு வளையங்கள் போடப்பட்டன. சுண்ணாம்பு மாவு கிடைக்காத இடங்களில் அரிசிமாவும் கோலமாவும் கை கொடுத்தது. காலை 10 மணிக்கு கடை துவங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், சில குடிமக்கள் முதல் நாளே சென்று எப்படி நிற்பது என ஒத்திகையிலும் ஈடுபட்டனர். மதுரையில் ஒரு கடையில், கடை திறப்புக்கு முன்பு கற்பூர ஆரத்தி காட்டப்பட்டது. பல மண்டபங்களில் வைக்கப்பட்டிருந்த சரக்கு பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடைகளுக்கு கொண்டு வரப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் ஒரு கடையில் சுண்ணாம்பு வளையத்திற்குள் குடையை அடையாளம் வைத்தார்கள். முகக் கவசம் அணிய மறந்த நிலையில், ஒரு குடிமகன் வேட்டியை கிழித்து முகத்தை மறைத்துக் கொண்டதும் நடந்தது. பெரிய மானஸ்தராக இருப்பார் போலும்.சில இடங்களில் உள்ளூர் காவல்துறையினரால் கூட்டத்தை சமாளிக்க முடியாத நிலையில், இயற்கை பேரிடர் பாதுகாப்புப் படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் தடியடி நடத்தி வரிசையில் நின்றவர்களை ஒழுங்குபடுத்தினர். இதில் இதுவும் தற்போது இயற்கைப் பேரிடரில் சேர்க்கப்பட்டு விட்டது போலிருக்கிறது. தன்னார்வலர்களையும் இந்தப் பணியில் ஈடுபடுத்தலாம் என அரசு அறிவித்தது. தன்னார்வலர்கள் யாரும் தன்னிச்சையாக சென்று உணவுப் பொட்டலம் தரக்கூடாது என தடுக்கப்பட்ட நிலையில், இந்த திருப்பணியில் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். 

மறுபுறத்தில் இந்த கொடிய காலத்தில், வீடுகளில் கஞ்சி காய்ச்சவே வழியில்லாத நிலையில், டாஸ்மாக் கடையை திறக்காதே என்று பெரும் குரல் எழுந்தது. டாஸ்மாக் கடைக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலிமை மிக்க குரலை எழுப்பியிருக்கிறது. சில குழந்தைகள், கடையை மீண்டும் திறக்க வேண்டாம் என்று முதல்வர் எடப்பாடியாரை சந்திக்க தனிமனித இடைவெளியோடு ஊர்வலமாக சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் வியாழனன்று மாநிலம் முழுவதும் வலிமை மிக்க போராட்டங்களை நடத்தியுள்ளன. தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் கொரோனா தொற்று காட்டுத் தீ போல பரவிவரும் நிலையில், டாஸ்மாக் கடையை மீண்டும் திறந்திருப்பது விபரீதத்திற்கு வெற்றிலை, பாக்கு வைத்து விருந்துக்கு அழைப்பது போல என்ற எச்சரிக்கை காற்றில் பறக்க விடப்பட்டுவிட்டது.

மதுக்கடைகள் இல்லாத இந்த நாட்களில் மதுவை மறந்திருந்த பலர் மீண்டும் கடையை நோக்கி கவனத்தை திருப்பியிருப்பது பல குடும்பங்களில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் என்ன, அரசுக்கு வருவாய்தானே முக்கியம். அது எப்படி கிடைத்தால் என்ன?

===மதுக்கூர் இராமலிங்கம்====