மெக்ஸிகோ சிட்டி
அமெரிக்காவின் அண்டை நாடான மெக்ஸிகோவில் கொரோனா பரவல் தாறுமாறான வேகத்தில் உள்ளது. தினமும் 3000-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுவதால் வட அமெரிக்க கண்டத்தின் புதிய கொரோனா மையமாக மெக்ஸிகோ மாறியுள்ளது.
இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் மெக்ஸிகோவில் 4 ஆயிரத்து 442 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 5 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 800-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில், உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 545 ஆக அதிகரித்துள்ளது. 75 ஆயிரம் பேர் கொரோனாவை வென்று வீடு திரும்பியுள்ளனர். வட அமெரிக்கக் கண்டத்தில் அமெரிக்காவிற்கு அடுத்து அதிக கொரோனா பாதிப்பைச் சந்தித்த நாடு என்ற இடத்தில் மெக்ஸிகோ நுழைந்துள்ளது.
இதற்கு முன் கனடா இருந்தது. அங்கு 93 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 ஆயிரத்து 600 பேர் பலியாகியுள்ளனர். கனடாவில் கொரோனா பாதிப்பு ஓரளவு கட்டுக்குள் உள்ளது குறிப்பிடத்தக்கது.