மாஸ்கோ
உலகின் மிகப்பெரிய நாடான ரஷ்யா தற்போது ஐரோப்பாவின் கொரோனா மையமாக உள்ளது. மார்ச் மாத கடைசியிலிருந்து அந்நாட்டில் பரவ தொடங்கிய கொரோனா இன்று வரை பம்பரமாக சுழன்று மக்களின் இயல்பு நிலையை கடுமையாக பாதித்து வருகிறது. குறிப்பாக மே, ஜூன் மாதங்களில் ருத்ரதாண்டவமாடிய கொரோனா அங்கு கடுமையான சேதாரத்தை ஏற்படுத்தியது. அந்த காலகட்டத்தில் தினசரி பாதிப்பு 10 ஆயிரத்துக்கு மேல் இருந்தது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் இறங்கு வரிசையில் பயணித்து வருகிறது. குறிப்பாக கடைசி 3 நாட்களாக முதன்முறையாக தினசரி பாதிப்பு 5 ஆயிரத்துக்குள் சுருண்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 4,892 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் அங்கு மொத்த பாதிப்பு 9.27 லட்சமாக உயர்ந்துள்ளது.மேலும் 55 பேர் பலியாகிய நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 15,740 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 7.36 லட்சம் வீடு திரும்பியுள்ளனர்.