பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவானது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தினால் அதிகம் பாதிக்கப்படும் பகுதியில் பிலிப்பைன்ஸ் உள்ளது. ‘நெருப்பு வளையம்’ எனப்படும் மிக ஆபத்தான பகுதியில் இந்த நாடு அமைந்திருப்பதால், அடிக்கடி நிலநடுக்கத்தினால் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் பிலிப்பைன்சின் லுசான் தீவில் நேற்று மாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 6.3 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை பிலிப்பைன்சின் சமர் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவானதாக அமெரிக்க மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்நிலையில் இன்று ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.