tamilnadu

5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் எட்டாக்கனியா? சாத்தியமா?

மோடி அரசாங்கம் பல ஆடம்பர அதிரடி அறிவிப்புகளை வெளியிடுவதில் திறமை பெற்றது என்பது கடந்த கால அனுபவம். இந்த அறிவிப்புகள் நடைமுறை சாத்தியமா என்பது குறித்து மோடி கவலைப்படுவது இல்லை. மற்றவர்களும் கவலைப்படக் கூடாது எனவும் எவரும் எந்த கேள்வியையும் எழுப்பக்கூடாது எனவும் மோடி நினைக்கிறார். எவராவது விமர்சனம் முன்வைத்தால் அவர்களை சிறுமைப்படுத்துவதும் தேச விரோதிகள் என முத்திரை குத்துவதும் சங்பரிவாரத்தினரின் வாடிக்கையாக உள்ளது. மோடியின் சமீபத்திய இத்தகைய அறிவிப்பு இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர்கள் பற்றியது ஆகும். இன்னும் 5 ஆண்டுகளில் அதாவது 2024ம் ஆண்டு அடுத்த தேர்தலுக்குள் 5 டிரில்லியன் டாலர்கள் அளவுக்கு இந்திய பொருளாதாரத்தை வளர்ப்பதே தனது நோக்கம் என மோடி அறிவித்துள்ளார். 2018ம் ஆண்டு முதலில் இந்த கருத்தாக்கம் முன்வைக்கப்பட்டது. 2019ம் ஆண்டு பிப்ரவரி இடைக்கால பட்ஜெட்டின் பொழுதும் தற்பொழுது பொருளாதார ஆய்வறிக்கை மற்றும் பட்ஜெட்டிலும் இந்த கருத்து வலுவாக முன்வைக்கப்பட்டுள்ளது.  “மேட் இன் இண்டியா” என முழக்கத்தை முன்வைத்து பின்னர் அதனை  “மேக் இன் இண்டியா” என மாற்றி மோடி ஒரு அதிரடி அறிவிப்பு வெளியிட்டார். இந்த திட்டம் மூலம் இந்தியா உலகின் உற்பத்தி கூடமாக மாறும் என கனவு விதைத்தார். ஆனால் இந்த திட்டம் எடுபடவில்லை என்பதே அனுபவம். எனவே 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது குறித்து கேள்விகள் எழுவது இயற்கையானதுதான்.  எனினும் இது சாத்தியமா என சந்தேகம் எழுப்பியவர்களை “நம்பிக்கையற்றவர்கள்” எனவும் “தோல்வி மனப்பான்மை உடையவர்கள்” எனவும் மோடி சாடியுள்ளார். “இந்தியா மற்றும் இந்திய மக்களின் திறமையை குறைத்து மதிப்பிடுபவர்கள்” எனவும் குற்றம் சாட்டியுள்ளார். இதன் மூலம் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தின் சாத்தியக்கூறு குறித்து கேள்வி எழுப்புபவர்களை ‘தேச துரோகிகள்’ என முத்திரை குத்தும் அணுகுமுறையை வெளிப்படுத்துகிறார் மோடி! எனினும் பல கேள்விகள் எழவே செய்கின்றன.

இந்திய பொருளாதாரத்தின் தர வரிசை
மற்ற தேசங்களுடன் ஒப்பிடும் பொழுது இந்தியாவின் பொருளாதாரம் தரவரிசையில் எங்கே உள்ளது என்பதை கீழே உள்ள பட்டியல் வெளிப்படுத்துகிறது:

 தேசம்

 பொருளாதாரம்      

(டிரில்லியன் டாலர்)

தரவரிசை
அமெரிக்கா                             20.4           1
சீனா                                 14.1           2
ஜப்பான்                               5.2           3
ஜெர்மனி                               4.0           4
இங்கிலாந்து                               3.0           5
பிரான்சு                               3.0           5
இந்தியா                               2.7           6

போட்டியிட வேண்டிய தேவை இந்தியாவிற்கு உள்ளது என்பதை இந்த பட்டியல் தெளிவாக்குகிறது.

5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது என்ன?

ஒரு டாலர் 70 ரூபாய்க்கு சமம் என வைத்துக் கொண்டால் 5 டிரில்லியன் டாலர் என்பது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) சுமார் ரூ. 3,55,00,000 கோடி என பொருளாகும். தற்போதைய இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு  ரூ.1,90,10,164 கோடி அதாவது 2.7 டிரில்லியன் டாலராக உள்ளது. இன்னும் 5 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் கிட்டத்தட்ட 85% ஒரு ஆண்டுக்கு 13% கூட்டு வளர்ச்சி வீதம் அதிகரிக்க வேண்டும். தேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9%ஆக அதிகரிக்க வேண்டும். (சில பொருளாதார வல்லுநர்கள் இந்த வளர்ச்சி 10 முதல் 13% ஆக இருக்க வேண்டும் எனவும் கூறுகின்றனர்) தற்போது இது 7.1% ஆக மட்டுமே உள்ளது.  இந்த மதிப்பீடு கூட தவறானது எனவும் இந்தியாவின் உண்மையான வளர்ச்சி  4.5% தான் எனவும் முன்னாள் முதன்மை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம் கூறுகிறார். இந்த பின்னணியில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி எவ்வளவு சவால் மிக்கது என்பதை அறிய முடியும். இந்தியா 9% வளர்ச்சியை எட்ட வேண்டும் எனில் உள்நாட்டு சேமிப்பு 40% ஆக இருக்க வேண்டும். ஆனால் தற்பொழுது இது 29.6%தான் உள்ளது. மேலும் மூலதனம் உருவாக்கத்தின் விகிதாச்சாரம் 41.2% ஆக இருக்க வேண்டும். ஆனால் இது தற்பொழுது 30.6% மட்டுமே உள்ளது. உள்நாட்டு சேமிப்பு 40% என்பதை உத்தரவாதம் செய்யாத எந்த தேசமும் வேகமான பொருளாதார வளர்ச்சியை சாதித்ததாக வரலாறு இல்லை.  மேலும் தொழில், விவசாயம், சேவைத்துறை ஆகிய மூன்றும் தற்சமயம் தேக்க நிலையில் உள்ளன. இவற்றை முன்னே செலுத்திட மக்கள் நலன் சார்ந்த பொருத்தமான கொள்கை முடிவுகளும் அவற்றை அமலாக்கும் உத்தரவாதமும் தேவை. மோடி அரசாங்கம் பொருளாதார வளர்ச்சிக்கு உள்நாட்டு சேமிப்பை சார்ந்து தனது திட்டத்தை அறிவிக்கவில்லை. மாறாக வெளிநாட்டு முதலீடையும் தனியார் முதலீடையும்தான் பெரிதும் நம்பி உள்ளது. அதனால்தான் காப்பீடு, இராணுவ தளவாடங்கள் தயாரிப்பு, ஊடகங்கள் ஆகியவற்றில் வெளிநாட்டு முதலீடுக்கு மோடி அரசாங்கத்தின் பட்ஜெட் சிவப்பு கம்பளம் விரித்துள்ளது. இரயில்வே உட்பட பல அரசு மற்றும் பொதுத்துறைகள் தனியாருக்கு தாரைவார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் இந்தியாவின் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சிக்கு வெளிநாட்டு முதலீடுகள் பெருமளவில் உதவ வாய்ப்பு இல்லை என்பதே கசப்பான உண்மை. இந்தியாவினுள் வந்த வெளிநாட்டு முதலீடு அதிகபட்சமாக ஜி.டி.பி.யில் 2.7% மட்டுமே! அதுவும் நிதி சந்தையில் ஈடுபடுத்தப்படும் முதலீடும் சேர்த்துதான் 2.7%. தொழில் உற்பத்தியில் செய்யப்படும் நேரடி அந்நிய முதலீடு (FDI) என்பது 2017-18ல் வெறும் 1.5% மட்டுமே! எனவே அந்நிய முதலீடு மூலம் இந்திய பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலர் அளவிற்கு அதிகரிக்கலாம் எனும் மோடி அரசாங்கத்தின் திட்டம் வெல்வதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு.  குறிப்பாக சர்வதேச பொருளாதார வளர்ச்சி டிரம்ப்பின் தவறான முடிவுகளால் ஊசலாடும் நிலையில் அந்நிய முதலீடு மட்டுமே அடிப்படையில் இந்தியாவின் வளர்ச்சிக்கு போதுமானது என்பது மிகவும் தவறான மதிப்பீடாகவே அமையும். 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் எட்டாக்கனி அல்ல. ஆனால் அதனை இந்தியா அடைய வேண்டுமானால் பொருத்தமான கொள்கைகளை உருவாக்குவதும் அவற்றை அமல்படுத்துவதும் அவசியம். அதற்கு மோடி அரசாங்கம் முன்வருமா என்பதுதான் மிகப்பெரிய கேள்வி.

கேக் பெரியதாக இருந்தால் மட்டும் போதுமா?
இன்னொரு மிகப்பெரிய கேள்வி உண்டு. இந்தியாவின் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் என வளர்ந்தாலும் உழைப்பாளிகளுக்கு அதனால் என்ன பயன் என்பதும் தவிர்க்க முடியாத கேள்வி ஆகும். “கேக் பெரிய அளவில் இருந்தால்தான் அனைவருக்கும் பங்கு கிடைக்கும்” என்கிறார் மோடி. ஆனால் கேக் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதன் மிகப்பெரிய பகுதியை அம்பானி மற்றும் அதானி போன்ற முதலாளிகள் அபகரித்து கொள்கிறார்கள் என்பதுதான் இந்தியாவின் அனுபவமாக உள்ளது.(உலக அனுபவமும் அதுவே!) உதாரணத்திற்கு முகேஷ் அம்பானி கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார் ரூ.66,430 கோடி அதாவது ஒரு நாளைக்கு ரூ. 182 கோடிவீதம்  கூடுதலாக செல்வம் சேர்த்துள்ளார். எனவே கேக்கின் அளவு பெரியதாக இருந்தால் அது அனைத்து மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பது தவறான மதிப்பீடு. ஐ.நா.வின் 2019ம் ஆண்டு உலக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் உள்ள 153 நாடுகளில்  இந்தியா 140வது இடத்தில் மிகவும் பின் தங்கி உள்ளது. பிரேசில்-32/ ரஷ்யா-68/ சீனா- 93/தென்னாப்பிரிக்கா-106/இலங்கை-116 என பல வளரும் நாடுகள் இந்தியாவைவிட மேலே உள்ளன. இந்தியாவின் பொருளாதாரம் 2.6 டிரில்லியனாக இருந்தாலும் பெரும்பான்மை மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பதையே ஐ.நா. பட்டியல் வெளிப்படுத்துகிறது. எனவே பொருளாதாரம் வளர்வது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அந்த வளர்ச்சி முறையாக அனைவரையும் சென்று அடைய வேண்டும் என்பதும் ஆகும்.
இதற்கு மக்களின் வாங்கும் சக்தி உயர வேண்டும். வேலை வாய்ப்புகள் அதிகரிக்க வேண்டும். மருத்துவத்திற்கும் கல்விக்கும் ஒதுக்கீடு செய்யப்படும் நிதி பெரிய அளவிற்கு கூடுதலாக்கப்பட வேண்டும்.  அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும். சாதி, மதம், பாலினம் அல்லது இனத்தின் அடிப்படையில் பாரபட்சம் இருத்தல் கூடாது. தேசத்தின் பன்முகத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்.  மோடியின் முதல் 5 ஆண்டு கால ஆட்சி போதுமான வளர்ச்சியை சந்திக்கவில்லை. உருவான வளர்ச்சியும் ஒரு சிலருக்கு மட்டுமே நன்மையாக அமைந்தது. மோடியின் இரண்டாவது ஆட்சியின் தொடக்கமும் நம்பிக்கை தருவதாக இல்லை. கேக் பெரியதாக இருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல; அது அனைவருக்கும் நியாயமான அளவில் பங்கிடப்பட வேண்டும். அவ்வாறு இல்லையெனில் தமது நியாயமான பங்கை பெற மக்கள் போராடுவது தவிர்க்க முடியாத ஒன்றாக அமைந்துவிடும்.