பெரு நாட்டில், சிமு நாகரீகத்தில் நரபலி கொடுக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தில் இருந்து 227 குழந்தைகளின் உடல்களை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பெரு நாட்டின் தலைநகரான லிமாவை ஒட்டியுள்ள ஹூவான்சாகோ பகுதியில் கடந்த ஒரு வருடமாக தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆய்வில் சிமு நாகரீகத்தில் நரபலி கொடுக்கப்பட்டதாக நம்பப்படும் இடத்தில், 227 குழந்தைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 4 முதல் 14 வயதிலான குழந்தைகள் கிபி 1,200-ஆம் ஆண்டில் இருந்து 1400-ஆம் ஆண்டு இடையே இந்த நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. தலைமுடி, தோல்களுடனும் ஒருசில உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
எல் நினோ (EL NINO) எனப்படும் மோசமான வானிலையை எதிர்கொள்ள நரபலி கொடுக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இது உலகிலேயே அதிக எண்ணிக்கையில் கொடுக்கப்பட்ட நரபலி என தலைமை தொல்லியல் ஆய்வாளர் கேஸ்டிலோ தெரிவித்துள்ளார். மேலும், அப்பகுதியில், தோண்டத் தோண்ட குழந்தைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றது. இதனால், நரபலி கொடுக்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.