tamilnadu

img

பாதுகாப்புப் படையினர் என்னை துன்புறுத்துகின்றனர்... மெகபூபா மகள் இல்திஜா முப்தி குற்றச்சாட்டு

ஸ்ரீநகர்:
பாதுகாப்புப் படையினரால் தாம் துன்புறுத்தப்படுவதாக காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் மகள் இல்திஜா முப்தி குற்றம் சாட்டியுள்ளார்.காஷ்மீருக்கான சிறப்பு உரிமைகளைப் பறித்த மோடி அரசு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்களை கடந்த 6 மாதமாக தடுப்புக் காவலில் வைத்துள்ளது. மெகபூபா முப்தியின் மகளான இல்திஜா முப்தியும் காஷ்மீர் பள்ளத்தாக்கை விட்டு வெளியே செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இல்திஜா முப்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “சிறப்புப் பாதுகாப்புப் படையினரால் (எஸ்எஸ்ஜி) நான் துன்புறுத்தப்பட்டு வருகிறேன். எஸ்எஸ்ஜி படையினர் மட்டுமின்றி ஐ.பி., உளவுத் துறை, சிஐடி போலீசார் ஆகியோர் என்னை தொடர்ந்துகண்காணித்து வருகின்றனர். பாதுகாப்பு என்ற பெயரில் எனது சுதந்திரத்துக்கான உரிமை பறிக்கப்படுகிறது” என்று கூறியுள்ளார்.“நாட்டில் பல தீவிரமான பிரச்சனைகள் நிலவி வருகின்றன. அதில் மத்திய உள்துறை அமைச்சகம் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு பதிலாக, என்னைப் போன்றவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் விவகாரங்களில் மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கக் கூடாது” என்றும் இல்டிஜா சாடியுள்ளார்.